காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420
ஊதியூர், காங்கயத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
காங்கயம், ஊதியூர், ஆகிய பகுதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
காங்கயம் ஒன்றியம், பொத்தியம்பாளையம் ஊராட்சிக்கு காங்கயத்தில் உள்ள பழனியப்பா மஹாலிலும், குண்டடம் ஒன்றியத்துக்கு உள்பட்ட வடசின்னாரிபாளையம்,குருக்கபாளையம், செங்கோடம்பாளையம், பெருமாள்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு ஊதியூரில் உள்ள பழநி ஆண்டவர் பாதயாத்திரை குழு மண்டபத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இம்முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்துப் பெட்டகங்கள், வேளாண்மைத் துறையின் சார்பில் காய்கறி விதைகள் மற்றும் இம் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாகத் தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, காங்கயம் ஒன்றியப் பகுதிகளில் குப்பைகள் சேகரிப்பதற்காக மறவபாளையம் ஊராட்சிக்கு 1 மின்கல வண்டி ரூ.2.20 லட்சம் மதிப்பீட்டிலும், நத்தக்காடையூர் ஊராட்சிக்கு 2 மின்கல வண்டிகள் ரூ.4.40 லட்சம் மதிப்பீட்டிலும், படியூர் ஊராட்சிக்கு 3 மின்கல வண்டிகள் ரூ.6.60 லட்சம் மதிப்பீட்டிலும், பழையகோட்டை ஊராட்சிக்கு 2 மின்கல வண்டிகள் ரூ.2.20 லட்சம் மதிப்பீட்டிலும், பரஞ்சேர்வழி ஊராட்சிக்கு 2 மின்கல வண்டி ரூ.2.20 லட்சம் மதிப்பீட்டிலும் என, ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் 10 மின்கல வாகனங்களின் சேவையினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், காங்கயம் வட்டாட்சியர் ஆர்.மோகனன், குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர் நாகலிங்கம், குண்டடம் கிழக்கு ஒன்றிய திமுக செயலர் சிவ.செந்தில்குமார் மற்றும் காங்கயம், குண்டடம் பகுதியைச் சேர்ந்த அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.