பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட வாலிகண்டபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலமான பெண்கள் வளமான குடும்பம் என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் இன்று (22.09.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
தேசிய சுகாதாரத் திட்டத்தின் மூலம் நலமான பெண்கள் வளமான குடும்பம் என்ற பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் தமிழக முழுவதும் 17.09.2025 அன்று முதல் தொடங்கி 02.10.2025 அன்று வரை நடைபெற உள்ளது.
இந்த முகாமில் பெண்களுக்கான உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள், வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்று நோய்க்கான பரிசோதனை, வளர் இளம் பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு இரத்தசோகை பரிசோதனை சிகிச்சை மற்றும் ரத்த சோகை நோய் வராமல் தடுப்பதற்கு தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு, பரிசோதனைகள், ஆலோசனைகள் மற்றும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்புசி சேவைகள்ளும் வழங்கப்படுகின்றன.
சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் குறைப்பது குறித்த ஆலோசனைகள், ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மூலம் விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இம்முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களையும், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள்.
தொடர்ந்து, இரத்த தானம் வழங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த அரங்கினை பார்வையிட்டு இரத்த தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கீதா, அட்மா தலைவர் திரு.வீ. ஜெகதீசன், நகர்மன்ற துணைத்தலைவர் திரு ஆதவன், வாலிகண்டபுரம் மு.ஊ.ம.தலைவர் களியம்மாள் அய்யாக்கண்ணு. வட்டார மருத்துவ அலுவலர் மரு.மீனாட்சி சுந்தரி, வாலிகண்டபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மரு. கவிமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.