. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில், 5 பயனாளிக்கு தலா ரூ.6,552 மதிப்பிலான சலவை பெட்டிகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டாவையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி வழங்கினார்.
மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட பெரம்பலூர் ரோவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பதினொராம் வகுப்பு பயிலும் செல்வி.எஸ்.சாத்விகா என்ற மாணவி பள்ளி பிரிவிலான 400 மீ ஓட்டப்பந்தயத்தில் மூன்றாமிடம் பிடித்து ரூ.50,000 ரொக்கத் தொகை மற்றும் வெண்கலப் பதக்கத்தினையும், மாற்றுதிறனாளிகள் பிரிவில் பிரேமாவதி என்ற மாற்றுதிறனாளி குண்டு எறிதல் போட்டியில் மூன்றாமிடம் பிடித்து ரூ.50,000 ரொக்க பரிசு மற்றும் வெண்கல பதக்கத்தினையும் பெற்றதையடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.
மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 258 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சக்திவேல், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சிவக்கொழுந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார்,தாட்கோ மேலாளர் கவியரசு உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.