ஜெம் புற்றுநோய் மையம் சார்பில் மார்பக ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கான பிரத்யேக ஜெம் ப்ரெஸ்ட் சென்டர் துவக்கம்
பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் துவக்கி வைத்தார்
ஜெம் மருத்துவமனையின் அங்கமான ஜெம் புற்றுநோய் மையம் இன்று தனது பிரத்யேக ஜெம் ப்ரெஸ்ட் சென்டரை திறந்து வைத்துள்ளது. இந்த புதிய மையம் மார்பக புற்றுநோய் மற்றும் பிற மார்பக நோய்களைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல் மற்றும் தடுத்தல் ஆகியவற்றில் சிறப்பான மையமாக விளங்கும் நோக்குடன் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடக்க விழாவில் பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம் அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். பெண்கள் ஆரோக்கியத்தில் தீவிர அக்கறை கொண்ட இவர், மார்பகப் புற்றுநோயின் ஆரம்பக் கண்டறிதல் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் அவசியத்தை ஊக்குவிக்கும் பிங்க் தூதுவராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். சி. பழனிவேலு தலைமை தாங்கினார். டாக்டர். பிரவீன் ராஜ் (நிர்வாக இயக்குநர்), டாக்டர். பரத் ராஜராஜன் (மருத்துவ இயக்குநர்), டாக்டர். மது சாய்ராம் (கல்வி இயக்குநர்), டாக்டர். சிவகுமார் (அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறைத் தலைவர்) மற்றும் டாக்டர். பிரேமா (கதிரியக்க நிபுணர் மற்றும் மார்பக ஆலோசகர்) ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
பெண்கள் ஆரோக்கியத்தில் ஒரு மைல்கல்
இந்தத் தொடக்க விழாவில் பேசிய டாக்டர். சி. பழனிவேலு அவர்கள், “ஜெம் மருத்துவமனையில் மருத்துவ நிபுணத்துவம் தான் சிறந்த விளைவுகளை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம். ஜெம் ப்ரெஸ்ட் சென்டரின் மூலம், மார்பகம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறப்பான கவனம் செலுத்தப்பட்ட, ஆதாரபூர்வமான மற்றும் கனிவான சிகிச்சையை வழங்க நாங்கள் இலக்கு வைத்திருக்கிறோம். இந்த மையம் எண்ணற்ற பெண்களுக்கு நம்பிக்கை ஒளியாகத் திகழும்,” என்று கூறினார்.
மருத்துவமனையின் முழுமையான அணுகுமுறையை டாக்டர். பிரவீன் ராஜ் எடுத்துரைத்தார்:
“மார்பகப் புற்றுநோய் என்பது ஒரு உடல்நல பாதிப்பு மட்டுமல்ல; அது ஒரு உணர்ச்சிபூர்வமான பயணமும் கூட. எங்கள் மையம் பரிசோதனை மற்றும் இமேஜிங் சேவை முதல் அறுவை சிகிச்சை, புற்றுநோயியல், மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு வரை — அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் ஒரு பல்நோக்கு சிகிச்சைக் குழு மாதிரியை வழங்குகிறது,” என கூறினார்.
டாக்டர். பரத் ராஜராஜன் மேலும் கூறியதாவது – “ஒவ்வொரு பெண்ணுக்கும் விரிவான மற்றும் கனிவான சிகிச்சைக்கான அணுகுமுறை இருக்க வேண்டும். வழக்கமான பரிசோதனைகள், ஸ்கிரீனிங் மேமோகிராம் மற்றும் சுய விழிப்புணர்வு ஆகியவை வாழ்க்கையை மாற்றியமைக்கும் முக்கியமான படிகள் ஆகும்.”
பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் பேசுகையில் ” மார்பகப் புற்றுநோய் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால், அதற்கு எளிதில் சிகிச்சை அளிக்க முடியும். பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு பிரத்யேக வசதியை உருவாக்கியதற்காக ஜெம் ப்ரெஸ்ட் சென்டருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,”என்றார்.
விழிப்புணர்வு மற்றும் ஆரம்பக் கண்டறிதலுக்கான உறுதிப்பாடு
அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர். சிவகுமார் விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
“கிட்டத்தட்ட 8 பெண்களில் ஒருவருக்கு தங்கள் வாழ்நாளில் மார்பகப் புற்றுநோய் வரலாம். வழக்கமான பரிசோதனை மூலம் ஆரம்பக் கண்டறிதல் உயிர் பிழைக்கும் விகிதங்களை வியத்தகு முறையில் அதிகரிக்கும். நோய் தடுப்பு சிகிச்சையை அனைவராலும் அணுகக்கூடியதாக மாற்றுவதும், பெண்கள் தங்கள் ஆரோக்கியப் பொறுப்பை ஏற்க ஊக்குவிப்பதும் எங்கள் நோக்கம்,”என கூறினார்.
கதிரியக்க நிபுணர் மற்றும் மார்பக ஆலோசகர் டாக்டர். பிரேமா, மையத்தின் அதிநவீன கண்டறியும் திறன்களை எடுத்துரைத்தார்.
“மேம்பட்ட இமேஜிங், அல்ட்ராசவுண்ட், மேமோகிராபி மற்றும் எம்ஆர்ஐ வசதிகளுடன், நாங்கள் நோயறிதலில் துல்லியத்தை உறுதி செய்கிறோம். பெண்கள் அறிகுறிகளுக்காக காத்திருக்கக் கூடாது — முன்கூட்டிய பரிசோதனையேமுக்கியமாகும்,”என்றார்.