தென்காசியில் கலெக்டர் அலுவலகம் முன்பு 10 பேர் தீக்குளிக்க முயற்சி – பதட்டம் 55 பெண்கள் உட்பட 108 பேர் கைது
தென்காசி, அக் – 07
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த கள்ளத்திகுளம் பகுதியைச் சார்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து போராட்டக் குழுவினரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள கள்ளத்திகுளம் பகுதியில் தனியார் நிறுவனம் சோலார் மின் ஆலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சோலார் மின் ஆலை அமைப்பதனால் வெப்ப சலனம் காரணமாக பொது மக்களுக்கு உடல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த பகுதி வன கட்டுப்பாட்டில் இருப்பதனால் ஏராளமான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. வன உயிரினங்களான மான்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்படுகிறது என இந்த மின் ஆலை அமைப்பதற்கு தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மக்கள் குறை தர்க்கும் நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக திரண்டு வந்த கள்ளத்திகுளம் கிராமத்தை சேர்ந்த 100க்கும் அதிகமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மரங்கள் வெட்டப்படுவதும் வன உயிரினங்கள் உயிரிழப்பதையும் தடுக்கும் வகையில் இந்த சோலார் மின் ஆலை அமைப்பதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் இதுகுறித்து தங்கள் பகுதி மக்களை கண்டு கொள்ளாமல் ஒடுக்குமுறை செய்து அந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதாக கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
அப்போது போராட்டம் நடத்திய பொதுமக்களில் ஐந்து நபர்கள் மட்டும் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு வழங்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி கலெக்டரை சந்தித்த போராட்ட குழுவினரிடம் கலெக்டர் கமல் கிஷோர் உடனடியாக வனத்துறை மூலம் நடவடிக்கை உரிய எடுக்க உத்தரவிடுகிறேன் என கூறினார்.
அதன் பின்னரும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலக வாசல் முன்பு தரையில் அமர்ந்து தொடர்ந்து அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினார்கள் அவர்களிடம் டிஎஸ்பி தமிழ் இனியன் இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுமக்களில் 10 பேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டில்களை தங்கள் உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முன்றனர். மேலும் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீதும் மண்ணெண்ணையை தெளித்தனர். இதனால் போலீசார் மற்றும் பொதுமக்கள் மீதும் மண்ணெண்ணெய் பட்டது. இதனால் அங்கு பெரும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பி தமிழ் இனியன், இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் மற்றும் ஆண் போலீசார் பெண் போலீசார் அனைவரும் கூட்டத்திற்குள் புகுந்து மண்ணெண்ணெய் ஊற்றிய நபர்களை அடையாளம் கண்டு உடனடியாக அவர்களின் தலையில் தண்ணீரை ஊற்றினார்கள்.
இதனால் கலெக்டர் அலுவலக வளாகலமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
அப்போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தீவிரமாக செயல்பட்டனர். தலையில் மண்ணெண்ணையை ஊற்றிய கும்பல் திடீரென மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்குள் நுழைந்துவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்பதால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கதவை போலீசார் அடைத்தனர்.
ஆனாலும் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆண்களும் பெண்களும் தொடர்ந்து கோஷமிட்டு கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த தீயணைப்பு துறையினர் போராட்டக் குழுவினர் மீது தண்ணீரை பீச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 55 பெண்கள் உட்பட 108 பேர்களை காவல்துறையினர் கைது பேருந்தில் தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர் இந்த் சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.