இராசிபுரம்- வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி( தன்னாட்சி )யில், தமிழ்நாடு அரசின் ” நான் முதல்வன்” திட்டத்தின் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான, ” கல்லூரி களப்பயணம் -2025″ நிகழ்ச்சியானது கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக, மாணவ, மாணவியருக்கான உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் அதற்கேற்ற வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை வழங்கும் விதமாக கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கல்லூரியில் உள்ள பல்வேறு துறைகளின் ஆய்வகங்களையும், மாணவர்கள் பார்வையிட்டனர். மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை களையும் விதமாக துறை சார்ந்த பேராசிரியர்கள் தகுந்த விளக்கம் அளித்து அவர்களை உற்சாகப்படுத்தினர்.
மேலும், நுண்ணறிவுக்கான சிறு விளையாட்டுகளும் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சி குறித்து பின்னூட்டம் தெரிவித்த மாணவ, மாணவிகள்: இந்த கல்லூரி களப்பயணமானது ஒரு புது அனுபவமாகவும், தெரியாத புதுவிதமான பல தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், பல்வேறு காட்சிகளைக் கண்டும், கேட்டு அறிந்து கொள்ளவும், இந்நிகழ்ச்சி பேருதவியாக இருந்தது என்று தெரிவித்தனர்.
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரை, கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.பி. விஜயகுமார், வரவேற்றார். அதனைத் தொடர்ந்து களப்பயணத்தை மேற்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவும், கைப்பைகளும் வழங்கப்பட்டன. பின்னர் மாணவ, மாணவியர் தங்களது சிறப்பான பின்னூட்டங்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 9- அரசு பள்ளிகளில் இருந்து சுமார் 475- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும் 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.