தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள உழவர் சந்தை அருகே தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு தேனி திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். சித்ராதேவி தலைமையில் மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை, மனித உரிமை மீறல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் கலவரத்தில் பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும் அதை தடுக்க தவறிய மணிப்பூர் மாநில அரசையும் இது வரையில் மணிப்பூரில் பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுத்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வராத மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பியதோடு தொடர்ந்து மணிப்பூரில் கலவரம் நடந்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கையோடு தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவை சார்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காமேஸ்வரி சர்வோதிப் அமைப்பின் இயக்குனர் சாயா சகாய சங்கீதா பெரியகுளம் நகர் நல சங்க செயலாளர் அன்புக்கரசன் ஆகியோர் கலந்துகொண்டு தங்களது கண்டன உரையை நிகழ்த்தினர். மேலும் 50க்கும் மேற்பட்ட தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவைச் சார்ந்த மகளிர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.