போச்சம்பள்ளி அடுத்த மருதேரி கிராமத்தில் உள்ள தெண்பெண்னை ஆற்றில் சமீபத்தில் தடுப்பணை கட்டப்பட்டு அதில் நீர் சேமிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பராமரிப்பிற்காக கடந்த 5 நாட்களாக தடுப்பணையில் இருக்கும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் தண்ணீர் குறைந்த காரணத்தால் அதில் மீன் பிடிப்பதற்காக இன்று காலை மருதேரி கிராமத்தை சேர்ந்த சேட்டு, ரமேஷ், வெங்கடேசன், ரவி ஆகிய இளைஞர்கள் ஆற்றுக்குள் சென்றுள்ளனர்.
அப்போது குறைந்த அளவு உள்ள தண்ணீரில் நடந்து சென்றபோது காலுக்கு அடியில் சிலை போன்ற பொருள் தட்டுப்பட்டுள்ளது. இதை எடுத்து பார்த்தபோது அவை சுமார் ஒரு அடி உள்ள சாமி சிலை என தெரிய வந்தது. இதையடுத்து அருகருகே தேடியபோது 5 சிலைகள் கிடைத்துள்ளன. இதையடுத்து இளைஞர்கள் நாகரசம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில் வந்த நாகரசம்பட்டி போலீசார் சிலைகளை எடுத்து பார்த்தபோது, அவைகள் கருப்பசாமி, விரபத்திரன்சுவாமி, ஆஞ்சனேயர் சுவாமி, பெருமாள் சுவாமி, முருகன் சுவாமி ஆகிய 5 ஐம்பொன் சிலைகள் என கண்டறியப்பட்டன.
இதையடுத்து போச்சம்பள்ளி வட்டாட்சியர் அனிதாவிடம் தகவல் கொடுத்து பின்னர் அவரிடம் சிலைகளை ஒப்படைத்தனர். ஐம்பொன் சிலைகள் எப்படி ஆற்று பகுதிக்கு வந்தது என போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்