தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டி பேரூராட்சி கலையரங்கத்தில் கவிப்பேரரசு வைரமுத்து கல்வி அறக்கட்டளை சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, வடுகபட்டி டாக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார்.

வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன், வழக்கறிஞர் மணி கார்த்திக், தலைமை ஆசிரியர் ராஜாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் குணா அனைவரையும் வரவேற்று பேசினார்.

கவிஞர் சங்கர பாண்டியன் வாழ்த்துக் கவிதை வாசித்தார். வடுகபட்டி பேரூராட்சி துணைத் தலைவர் அழகர் நல்லுரை ஆற்றினார். விழாவில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சொல்வேந்தர் கம்பம் செல்வேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

விழாவில், பத்மபூஷன் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி சிறப்புரையாற்றினார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கவிப்பேரரசு வைரமுத்துவின் சொந்த ஊரான வடுகபட்டியில் கவிப்பேரரசு வைரமுத்து கல்வி அறக்கட்டளை சார்பாக கல்வி நிதி வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்ற கவிப்பேரரசு வைரமுத்து தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் தமிழ் வழிகல்வியில் 12ஆம் வகுப்பு முடித்த ஓரளவிற்கு நல்ல மதிப்பெண்களை எடுத்து ஏழ்மைநிலையால் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் உள்ள மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றார்.

அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களை தேர்தெடுத்து கவிப்பேரரசு வைரமுத்து கல்வி அறக்கட்டளை சார்பாக 8 மாணவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாயிற்கான காசோலையை கவிபேரரசு வைரமுத்து கல்வி நிதியாக மாணவ மாணவியருக்கு வழங்கினார்.

இதனை தொடர்ந்து கவிஞர் வைரமுத்து நிகழ்ச்சியில் பேசிய போது ஆசிரியர்களே, பெற்றோர்களே மைக்ரோசாப்ட் வாழ்க்கையை அமெரிக்கா கற்றுக் கொடுக்கும், தங்கள் பிள்ளைகளுக்கு உள்ளூர் வாழ்க்கையை, உள்ளூர் பண்பாட்டை, உள்ளூர் கலாச்சாரத்தை கற்றுக் கொடுங்கள். தமிழர்களின் மொத்த புத்தியே நேர்மையை மதிப்பதும் அறிவை கொண்டாடுவதும் தான் தமிழனின் பூர்வ குணம். 10 வயது இளைஞர்கள் குடிப்பதற்கு யார் கற்றுக் கொடுத்தது அரசாங்கம் பொறுப்பா, ஒழுக்கம் என்பது புறச்சூழல்களால் மட்டும் அமைவதில்லை அகச் சூழலால் அமைவது ஒழுக்கம், என்பதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் குடியின் பெருக்கம் மனித வாழ்வை தின்று கொண்டிருக்கிறது, மேல்நாட்டில் மதுவை குடிக்கிறான் நம் நாட்டில் மது மனிதனைக் குறிக்கிறது, நான் அரசாங்கத்திற்கு விரோதமாகவோ சார்பாகவோ பேசவில்லை, மதுவுக்கு விரோதமாகவும் சமூகத்திற்கு சார்பாக பேசுகிறேன். தமிழகத்தில் 14.6% மக்கள் குடிக்கிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது. 2004 இல் தமிழக அரசின் மது விற்பனை 3649 கோடி ரூபாய், 2023 ஆண்டில் 44 ஆயிரம் கோடி ரூபாய், சிறுவர்கள் அனைவரும் செத்துக் கொண்டிருக்கிறார்கள், 40 வயதிற்கு ஆட்களை காணவில்லை, இளைய தலைமுறை உருவாக்க வேண்டும் இருக்கும் தலைமுறையை விட வளரும் தலைமுறையின் மீது எனக்கு அக்கறை அதிகமாக உள்ளது, தமிழர்களின் மனித வளம் அபாரமானது, மதுவால் தமிழர்களின் மனித வளம் குறைந்து விடக் கூடாது என்று வருத்தப்படுகிறேன்.

இந்த குடி தான் விபத்துகளுக்கும் தற்கொலைக்கும் காரணம், இந்தியாவிலேயே தமிழகம் தற்கொலை மாநிலமாக இருப்பதும் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்று கூறிய வைரமுத்து மாணவ மாணவிகளை பார்த்து தன்னம்பிக்கையோடு வளர வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் என் அறக்கட்டளை வளர வளர தென் மாவட்டங்கள் மட்டுமல்ல தமிழக முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அறக்கட்டளை மூலியமாக கல்வி உதவித்தொகை வழங்குவேன் எனக்கு பின்பும் என் மகன்கள் இந்தப் பணியை தொடர்வார்கள் என கவிப்பேரரசு வைரமுத்து விழாவில் பேசினார்.

விழாவில் ஆசிரியர் ராமகுரு நன்றி கூறினார். தேசிய நல்லாசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் முருகேசன் விழாவினை தொகுத்து வழங்கினார். வெற்றி தமிழர் பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *