மன்னார்குடி   செய்தியாளர்  தருண்சுரேஷ்

“ஓலைக்கவாண்டயார் ஆலயத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அசைவ அன்னதானம்”

உலக நலம், இயற்கை வளம் செழித்தோங்க வேண்டி மன்னார்குடி அருகே நூற்றுக்கணக்கான ஆடு, கோழிகளை பலிகொடுத்து ஓலைக்கவாண்டயார் ஆலயத்தில் நேர்த்திகடன் வழிபாடு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கபட்டது .

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட கிராமம் பைங்காநாடு. இக்கிராமத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்குடும்பங்களை சேர்ந்தவர்களின் உறவினர்கள் தமிழகம் மட்டுமன்றி, அண்டை மாநிலங்கள், வெளிநாடுகள் என ஆயிரக்கணக்கானோர் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

இக்கிராமத்தில் நடைபெறும் ஆலய வழிபாடு முதலான பொது நிகழ்ச்சிகளில் அனைவரும் ஒருங்கிணைந்து நின்று தங்களது குடும்ப நிகழ்ச்சியை போன்று கொண்டாடுவது வழக்கம்.

இதன்படி இக்கிராமத்தில் அமைந்துள்ள தொன்மை சிறப்புவாய்ந்த ஓலைக்கவாண்டையார் எனும் ஆலயத்தில் காவல் தெய்வமாக இருந்து அருள்பாலித்துவரும் ஸ்ரீகலிவீரன், ஸ்ரீமுன்னோடியன் சுவாமிக்கு கிடாவெட்டி பூஜை நடத்தி பின்னர் பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் படைக்கும் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம்.

கடந்த சில ஆண்டுகாலமாக இவ்விழா தடைப்பட்டு இருந்த நிலையில் உலக அளவில் நாட்டு மக்கள் பல்வேறு கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரழப்பு ஏற்பட்டதோடு, இயற்கை வளங்களும் செழித்தோங்காமல் கடும் இன்னல்களை நாட்டு மக்கள் அனுபவித்து வந்தனர்.

இந்நிலையில் பைங்காநாடு கிராமத்தில் தடைப்பட்ட இவ்விழாவினை உலக நன்மை வேண்டியும், இயற்கை வளம் செழித்தோங்க வேண்டியும் இவ்வாண்டு செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகளை கிராம மக்கள் ஒன்று கூடி முன்னெடுத்தனர்.

இதன்படி ஆட்டுகிடாவெட்டி பலிகொடுக்கும் நிகழ்ச்சிக்காக பத்திரிக்கை அச்சடித்து கிராமம் முழுவதும் வீடுவீடாக சென்று விநியோகித்ததோடு, பைங்காநாடு கிராமத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் அருகில் உள்ள கிராமங்கள், அண்டை மாவட்டங்கள், மாநிலங்கள், உலக அளவில் வசிப்பவர்கள் என அனைவருக்கும் ஆண்டு திருவிழாவிற்கான பத்திரிக்கை அனுப்பப்பட்டது.

அதன்படி இன்று நடைபெற்ற இவ்விழாவிற்காக நேற்று இரவு 100க்கும் மேற்பட்ட ஆடுகள், 80க்கும் மேற்பட்ட கோழிகள் மேள தாளங்கள் முழங்க , வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு ஆடுகள் மற்றும் கோழிகள் ஒவ்வொன்றாக வெட்டி காவல் தெய்வங்களுக்கு பலிகொடுக்கப்பட்டது.

இதனை அடுத்து இன்று காலை காவல் தெய்வங்களுக்கு பலிகொடுக்கப்பட்ட ஆடு மற்றும் கோழிகளை கொண்டு பிரசாதம் தயாரிக்கப்பட்ட நிலையில் அவற்றை காவல் தெய்வங்களான கலிவீரன், முன்னோடியான் சுவாமி முன்பு படையலிட்டு ஊர் மக்கள் பூஜை நடத்தி மனமுருக பிராத்தனை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து இத்திருவிழாவில் பங்கேற்ற பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்துகொண்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் பரிமாறப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *