மின்சார வாகனங்கள் உற்பத்தித் துறையில் உள்ள சவால்களை எதிர்த்துக் கொண்டு, பல்வேறு சாதனைகளை MSME தொழில் முனைவோர் புரிவர்:
MSME துறை அரசு செயலாளர் வி. அருண் ராய் பேச்சு

கோவை, செப் 8- மின்சார வாகனங்கள் உற்பத்தித் துறையில் இருக்கும் சவால்களை எதிர்த்துக் கொண்டு, பல்வேறு சாதனைகளை MSME தொழில் முனைவோர் புரிவர் என MSME துறை அரசுச் செயலாளர் வி. அருண் ராய் கூறினார்.
ஸ்கில் லிங் திட்டம் தொடக்க விழா கோவையில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று, MSME துறை அரசு செயலாளர் வி. அருண் ராய் பேசியது:
தற்போது தொழில்துறை குறிப்பாக, ஆட்டோமொபைல் துறை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. முதலில் இரண்டு சக்கர வாகனங்கள் மின்சார வாகனங்களாக மாற்றப்பட்டன.

அதைத் தொடர்ந்து, மூன்று சக்கர வாகனங்கள் மின்சார வாகனங்களாக மாற்றப்பட்டன. தற்போது, நான்கு சக்கர மின்சார வாகனங்களை மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

இத்தகைய மாற்றம் உலகம் முழுவதும் நிகழ்ந்து வருகிறது. இந்த மாற்றத்தின் வேகம் இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது.
தமிழகம் பொறியியல் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் முதன்மை மாநிலம். மாநிலத்தின் பொருளதாரத்தின் மொத்த மதிப்பில் 20 சதவீதம் உற்பத்தி துறையில் இருந்துதான் வருகிறது.

மின்சார வாகனங்களின் உற்பத்தி புதிய வாய்ப்புகளையும், சவால்களையும் உருவாக்கியுள்ளது. மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும் முதன்மை மாநிலமாக தமிழகம் இருக்கிறது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள மின்சார வாகனத் திட்டங்களுக்கான முதலீடுகளின் தன்மையை கூர்ந்து கவனித்தால், தமிழ்நாடுதான் அதிக முதலீட்டை ஈர்த்துள்ளது என்பது புரியும். அதனால்தான் தனியார் பெரும் நிறுவனங்கள் தமிழகத்தில் தங்களின் மின்சார வாகனத் தயாரிப்புத் தொழிலை துவங்கியுள்ளன.

இந்த நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், மின்சார வாகனங்களுக்கான உள்கட்டமைப்பை உருவாக்கும் வகையிலும் சார்ஜிங் வளாகங்களை நெடுஞ்சாலைகளில் ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் மூலமாக இயங்கும் வாகனங்களை தயாரிக்க 1000-க்கும் மேற்பட்ட உதிரிப் பாகங்கள் தேவைப்படும். அவற்றை கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன.

ஆனால், மின்சார வாகனங்களில் மொத்தமே 29 உதிரிப் பாகங்கள்தான் இருக்கின்றன. எனவே, உற்பத்தி பெருமளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய மாற்றத்துக்கு MSME துறையைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் தங்களை தயாரிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவது அவசியமாகிறது.

இத்தகைய மாற்றங்களை நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களால் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியும் என நம்புகிறேன். எனவே, மின்சார வாகனங்கள் உற்பத்தித் துறையில் இருக்கும் சவால்களை எதிர்த்துக் கொண்டு, பல்வேறு சாதனைகளை MSME தொழில் முனைவோர் புரிவார்கள் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *