கல்வி ஒன்றுதான் வெற்றிக்கு வழி – கல்லூரி பேராசிரியர் பேச்சு தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உன்னையே நீ அறிவாய் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது.
ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் வேலாயுதராஜா பள்ளி மாணவர்களிடம் தனது வாழ்க்கையையே வரலாறாக எடுத்துக்கூறினார் . உன்னையே நீ அறிவாய் என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார்.
பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வி அடைந்து, பெட்டிக் கடையில் வேலை பார்த்து பல சோதனைகள், அவமானங்கள், .வேதனைகளை அனுபவித்து கல்லூரிப் படிப்பு படித்து, அரசு கலைக்கல்லூரியில் ஆசிரியராக பணியில் சேர்ந்த தனது அனுபவத்தை மாணவர்களுக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.
கல்வி மட்டுமே நமக்கு எப்பொழுதும் துணை நிற்கும். பெரும் செல்வம், மிகப் பெரிய வீடு, மிகப் பெரிய பங்களா, மிகப்பெரிய பொருட்கள் எல்லாம் தானாக குறுகிய காலத்தில் அழிந்து போகும் தன்மை கொண்டது.
ஆனால் கல்வி ஒன்றுதான் எப்பொழுதுமே நம்மை விட்டு மாறாதது என இளம் வயது மாணவர்களுக்கு விளங்கும் வகையில் விளக்கமாக எடுத்துரைத்தார். தனது வாழ்க்கையே அதற்கு ஒரு பாடமாக இருக்கும் என்றும் மாணவர்களுக்கு புரிய வைத்தார்.
பங்க் கடையில் 500 ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்த தனது வாழ்க்கை இன்று ஒரு லட்சம் ரூபாய் பெறுவதாக மாறியதற்கு கல்வி மட்டுமே காரணம் என்றும் கூறினார்.
பல்வேறு விதமான தகவல்களை பின்னுட்டமாக வழங்கிய மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் ஏராளமான பெற்றோரும் பங்கேற்றனர். ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.