நூல்ஆசிரியர்கள் : கவிஞர் கார்முகிலோன்
கவிஞர் வசீகரன் 98414 36213
அப்துல் கலாம்
மலரடி மூவடி மணிமாலை
நூல்ஆசிரியர்கள் : கவிஞர் கார்முகிலோன்
கவிஞர் வசீகரன் 98414 36213
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை, சென்னை – 18. விலை : ரூ. 20
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
அறவழி வாழ்ந்தால் இறந்த பின்னும் மக்கள் மனங்களில் வாழலாம் என்று உணர்த்திய மாமனிதர் அப்துல் கலாம். இவரது மறைவிற்காக இந்தியா மட்டுமல்ல, உலகமே அழுதது. ஒவ்வொரு குடும்பத்திலும் தன் குடும்பத் தலைவர் இறந்து விட்டது போல சோகம் இழையோடியது. காந்தியடிகள் போல, காமராசர் போல நேர்மையாக வாழ்ந்ததால் புகழ் சாத்தியமானது. இயந்திரமயமான உலகில் இயந்திரமாகி விட்ட மனிதர்கள், நேர்மையை கேலி பேசி வந்தார்கள். அவர்களுக்கு விடை சொல்வதாக அமைந்தது அவரது மரணம்.
சிற்றிதழ்களில் பரிசுப் போட்டிகளுக்கு பரிசு வழங்கியவர், சென்னையில் நடக்கும் இலக்கிய விழாக்களின் புரவலர் மட்டுமல்ல, சிறந்த படைப்பாளியுமான பொன் போன்ற மனத்திற்கு சொந்தக்காரரான இனியவர் நண்பர் கார்முகிலோன் அவர்களும், பொதிகை மின்னல் மாத இதழ் ஆசிரியரும், மின்னல் கலைக்கூடம் பதிப்பகத்தின் மூலம் குடத்து விளக்காக இருந்த என் போன்ற பல கவிஞர்களை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்து வருபவருமான இனிய நண்பர் கவிஞர் வசீகரன் இருவரும் இணைந்து கை அடக்க நூல் படைத்துள்ளனர்.
மாமனிதர் அப்துல் கலாம் அவர்களுக்கு பலரும் பலவிதமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர்கள் மலரடி மூவடி மணிமாலை தொகுத்து வழங்கி உள்ளனர்.
நூலில் உள்ள கவிதைகள் சிறப்பா? புகைப்படங்கள் சிறப்பா? என பட்டிமன்றமே நடத்தலாம். கலாமின் அரிய புகைப்படங்கள் காட்சிக்கு விருந்து. நூலில் உள்ள 84 துளிப்பாக்களும் மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் புகழை உணர்த்துவதாக உள்ளன. மிகவும் பிடித்தவைகளில் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு :
கவிஞர் கார்முகிலோன் கவிதைகள் :
ஊனுடம்பு மறைந்தாலும்
உள்ளத்தில் உள்ளான்
உத்தம புருஷன் !
புகழ் உடம்பு என்றும் அழிவதில்லை என்று சொன்ன திருவள்ளுவரின் வாக்கை வழிமொழிந்து வடித்த பா நன்று.
கருவில் திரு
கண்ணியத்தின் உரு
காண்பதெங்கினி !
மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள், கண்ணியமிக்க வாழ்க்கை வாழ்ந்தார்கள். குடியரசு தலைவர் பதவியில் இருந்த காலத்திலும் யாரையுமே கடிந்தது இல்லை. உப்பு அதிகமாக இட்டு சமைத்து வழங்கிய போதும் சமையல்காரர் மீது கோபம் கொள்ளாதவர். அவரது வாழ்க்கையை உணர்ந்து வடித்த பாக்கள் மிக நன்று.
தென்கோடி வடகோடி
எல்லாமே உன்னால்
கொண்டது பெரும் புகழ் !
ஆம், உண்மை. வட மாநிலங்களிலும், பல்கலைகழகத்திற்கும், வீதிகளுக்கும் கலாம் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். உருவச் சிலை நிறுவி மகிழ்கிறார்கள். தென் இந்தியர் வேறு யாருக்கும் இவ்வளவு புகழ், வட இந்தியாவில் கிடைக்கவில்லை என்பது உண்மை. உண்மையாக வாழ்ந்தால் போற்றப்படுவாய என்பதற்கு உதாரணம் கலாம் அவர்கள்.
கோடிக்கணக்கான மாணவர்களை சந்தித்து தன்னம்பிக்கை விதை விதைத்தவர் கலாம். மாணவர்களை மிகவும் நேசித்தவர் கலாம். மாணவர்களால் நேசிக்கப்பட்டவரும் கலாம்.
மாணவர் உலகம்
மறக்கவே முடியாத
சாதனைத் திலகம் !
பொதிகை மின்னல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் கவிதைகள் :
முதல் கவிதையே முத்தாய்ப்பாக, சோகத்தை உணர்த்தும் விதமாக உள்ளது.
கனவு மேகம்
கண்ணீர் மழை
கலாம் பிரிவு !
கனவு என்ற சொல்லை உச்சரித்தாலே நம் நினைவிற்கு வருவது கலாம் தான் என்பதை கலாம் ஒரு காலம் ’ என்ற பதிப்புரையில் குறிப்பிட்டதை உணர்த்தும் கவிதை நன்று.
உறங்க விடாத
உன்னத கனவு
கலாமின் நினைவு !
மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள், எங்கு பேசினாலும் திருக்குறளை மேற்கோள் காட்டி தான் பேசுவார். திருக்குறளை படித்ததோடு நில்லாமல் அதன் வழி கற்றபடி வாழ்ந்த காரணத்தால் தான் பெரும் புகழ் பெற்றார்கள். கலாமின் வெற்றிக்குக் காரணம் திருவள்ளுவர் என்றால் மிகையன்று.
திருக்குறள் கற்றார்
திருப்புகழ் பெற்றார்
திறமையால் நம் கலாம் !
மாமனிதர் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த போது திருச்சியில் உள்ள விருந்தினர் மாளிகையில் சந்திப்பதற்கு எனக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அனுமதிச் சீட்டு வழங்கினார். முதன்முதலாக அவரை நேரில் சந்தித்த மகிழ்வான நேரம் இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளது. இரவு 10 மணி இருக்கும். அங்கிருந்த பணியாளர் சொன்னார். இதற்கு முன்பு வந்த குடியரசுத் தலைவர்கள் எல்லாம் 8 மணிக்கே அறைக்கு சென்று விடுவார்கள். இவர் தான் சுறுசுறுப்பாக விருந்தினரை சந்தித்து உரையாடி மகிழ்கிறார் என்றார். அதனை நினைவூட்டியது இக்கவிதை.பலர்க்கு அவரை ஒரு முறை கூட நேரில் சந்திக்க வில்லை என்று வருத்தும் உண்டு .எனக்கோ அவரை 5 முறை சந்தித்த அனுபவம் உண்டு .சாட்சியாக புகைப்படங்களும் .அவரது கடிதங்களும் உண்டு .அவர் பற்றிய நினைவு அலையலையாக வந்து கொண்டே இருக்கும் .
குடியரசுத் தலைவர்
பதவி புகழ் பெற்றது
கலாம் அமர்ந்த வேளை !
கலாம் அவர்கள் மதங்களைக் கடந்து மனிதம் போற்றியவர். சக மனிதனை மனிதனாக நேசித்தவர். யாரிடமும் சினம் கொள்ளாத சீலர். அதனை உணர்த்திடும் கவிதை நன்று.
மனித நேயம் ஒன்றே
மகுடத்தை சூடும்
மதம் கடந்த கலாம்!
கலாம் அவர்கள் திரைப்படத்தில் நடித்த நடிகரும் இல்லை. அரசியல்வாதியும் இல்லை. பிறகு எப்படி அவருக்கு இவ்வளவு புகழ் கிடைத்தது, காரணம் என்ன? என்று ஆராய்ந்தால், உண்மை, நேர்மை, நெறியான வாழ்க்கை, பேச்சு, எழுத்து, வாழ்க்கை மூன்றிலும் வேற்றுமையின்றி ஒற்றுமை.
நுழைந்த போதும் இரண்டு பெட்டி
வெளியேறிய போதும் இரண்டு பெட்டி
குடியரசு அதிபர் மாளிகை!
பெட்டி பெட்டியாக பணம் வாங்கிச் சேர்க்கும் அரசியல்வாதிகள், மாமனிதர் கலாம் அவர்களைப் பார்த்து திருந்த வேண்டும்.
மாமனிதர் கலாம் உடலால் உலகை விட்டு மறைந்த போதும் உழைப்பால், நேர்மையால், எளிமையால் மக்கள் மனங்களில் வாழ்ந்து கோனே இருப்பார்அவருக்கு என்றும் மரணம் இல்லை .நூலாசிரியர்கள், கவிஞர்கள் கார்முகிலோன், வசீகரன் இருவருக்கும் பாராட்டுக்கள்.