கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட காளப்பட்டி,விளாங்குறிச்சி சாலைகளில் நடைபெறும் சாலை பணிகளை கோவை வந்த முதல்வர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்…
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதி படியூரில் நடைபெறும் திமுக மண்டல அளவிலான வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
இதனை தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சென்ற முதலமைச்சர் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 5 மற்றும் 8 ஆகிய வார்டு பகுதிகளான காளப்பட்டி, விளாங்குறிச்சி சரவணம்பட்டி பகுதியில் திடீரென சாலை பணிகளை ஆய்வு செய்தார்.
இதில் வார்டு எண்: 5 நஞ்சப்பா நகரில் உள்ள வி.கே.வி நகரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 2.21 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு மதுக்கரை ஆர்.கே.பில்டர்ஸ் செய்து வரும் தார் சாலை பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்பகுதியில் சாலை புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் .கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் .பொன்முடி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப்,ஒப்பந்த்தாரர் ராஜ் குமார் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.