தஞ்சை மாவட்டத்தில் கனமழை.
அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்.

தமிழகத்தில்
தொடர் கனமழை காரணமாக, அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் ஏராளமான ஏக்கரில் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலங்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழைப் பொழிவால் கிராமங்களில் விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்துள்ளது. அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. திருப்பனந்தாள் அருகே நரிக்குடி, பாலாக்குடி, கல்யாணபுரம், பருத்திகுடி, அணக்குடி,
பந்தநல்லூர், மரத்துறை உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிரும், ஒரு சில பகுதிகளில் மணிலாவும் நீரில் மூழ்கியுள்ளன. சுமார் 150 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர். ஓரிரு நாள் மழை பெய்தால் இந்தப் பயிர்கள் முழுமையாக அழுகி வீணாகும் நிலையில் உள்ளது.

இது பற்றி விவசாயிகள் சங்க நிர்வாகி அமிர்த கண்ணன் கூறுகையில்,

கிராமங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து தரையோடு தரையாக மடிந்து மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பொன்னி, பிபிடி சன்ன ரக போன்ற நெல் ரகங்கள் மார்கழி கடைசியிலும் தை மாதம் முதலிலும், அதாவது பொங்கலுக்கு அறுவடை செய்யும் காலக்கட்டமாகும். ஓரளவுக்கு நல்ல விலை கிடைக்கும் நேரத்தில் இப்பொழுது பெய்யும் மழை பருவம் தவறி செய்வதால் விவசாயிகளுக்கு பெருத்த நட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

மழை மேலும் ஒரு வார காலம் நீடிக்கும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மழை நின்ற போதும் நெல் அறுவடை செய்து நெல் மணிகளை வெளியில் கொண்டு வருவதற்கு கிட்டத்தட்ட 15 – 20 நாள் முதல் ஒரு மாத காலம் வரை ஆகும். இதனால் நெல் விளைச்சல் என்பது முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.

எனவே, தமிழக அரசு வேளாண் நலத்துறை பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு அதற்குரிய இழப்பீடு தொகையை அறிவித்து உடனடியாக வழங்கி விவசாயிகள் உழவர் திருநாளை நிம்மதியோடு கொண்டாடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *