காளை தழுவும் காளை!
கவிஞர் இரா. இரவி
தைமகளே வருகவே தமிழ்மகளே வருகவே
தரணியெங்கும் செழிக்கவே தைமகளே வருகவே!
தடைகளை உடைத்து தகர்த்து வருகின்றன காளைகள்
துள்ளிக் குதித்து கட்டிளம் காளைகள் வருகின்றனர்!
உலகில் எங்கும் காண முடியாத வீரக்களம்
உலகமே வியக்கும் தமிழ்வீரர்களின் ஜல்லிக்கட்டுக்களம்!
மற்ற நாடுகளில் கையில் ஆயுதத்துடன் தாக்குவார்கள்
மண்ணில் தமிழ்மண்ணில் நிராயுதபாணியாகவே நிற்பார்கள்!
உயிரையும் பணயம் வைத்து விளையாடும் விளையாட்டு
ஊர் போற்றும் உலகம் போற்றும் ஒப்பற்ற விளையாட்டு!
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருடாவருடம்
விரும்பி வந்து தேடி வந்து பார்க்கும் ஜல்லிக்கட்டு!
மனதில் தில் மிக்கவர்கள் இறங்கி ஆடும் விளையாட்டு
மனதில் பயம் உள்ளவர்கள் இறங்க முடியாத விளையாட்டு!
நீதிமன்றத்தில் தடை என்றபோது பொங்கி எழுந்தனர்
நீதி கேட்டு மெரினா கடற்கரை மிரண்டு போனது!
அஞ்சாத காளைகள் அணிவகுத்து நின்றனர்
அடங்கி ஒடுங்கி அனுமதித்தனர் ஜல்லிக்கட்டை!
போராடாமல் கிடைக்காது வெற்றி மெய்ப்பித்தது
போராடி வென்றோம் வெற்றி மாலையை!
உலகத் தமிழர்கள் ஓரணியில் திரண்டு நின்றனர்
உலகமே ஆதரவு வழங்கி சிறப்பித்தது ஜல்லிக்கட்டை!
மக்களுக்குக் எதிரான எந்த சட்டமும் நிலைக்காது
மக்களுக்காக சட்டத்தை மாற்றும் நிலை வந்தது!
காளைகளைத் துன்புறுத்துவதாக பொய்க்காரணம் கூறினர்!
காளைகளை குடும்பத்தில் ஒன்றாக வளர்ப்பவர் தமிழர்!
பெரும்பாலான காளைகளை அடக்குவர் நம் காளைகள்
ஒருசில காளைகள் அடங்காமலும் கடப்பதுண்டு!
அடஙக்கியவருக்கு பரிசுகள் பல உண்டு
அடங்காத காளையை வளர்த்தவருக்கும் பரிசு உண்டு!
தமிழ்ப்புத்தாண்டாம் தைத் திங்கள் திருநாளில்
தமிழர்கள் கூடி விளையாடும் விளையாட்டு ஜல்லிக்கட்டு!
தமிழ் இலக்கியங்களிலும் ஜல்லிக்கட்டு உள்ளது
தமிழர்கள் காளையை அடக்கியவருக்கு மகளையும் தந்துள்ளனர்!
காளையை அடக்கிய காளைக்கு தன்மகளை
கல்யாணம் செய்து கொடுத்து மருமகனாக்கி உள்ளனர்!
கணினியுகத்தில் அப்பழக்கம் வழக்கொழிந்தது
காளை அடக்கிய காளைக்கு அபார பரிசுகள் உண்டு!
மெய் சிலிர்க்க வைக்கும் வியப்பான விளையாட்டு
மண்ணில் ரத்தம் சிந்தும் வீர விளையாட்டு!
குடல் சரிந்து மடிந்து போவதும் நிகழ்வதுண்டு
காளைகளைக் கண்டு அஞ்சாதவர்கள் நம் காளைகள்!
திரும்பி வருவோம் உறுதி இல்லாத போதும்
தெம்பாக தைரியமாக மோதும் வீர விளையாட்டு!
கோழைகளால் காளை அடக்க முடியாது
காளைகளால் தான் காளைகளை அடக்க முடியும்!
பொங்கலின் மறுநாள் மாட்டுப்பொங்கல் வைப்போம்
பொங்கல் வைத்து மாடுகளை தெய்வமாக வணங்குவோம்!
உழவிற்கு உதவி செய்த உன்னத மாடுகளை
உயர்த்திப் போற்றும் பொன்னாள் மாட்டுப்பொங்கல்!
தமிழகத்தில் மட்டுமே நடக்கும் வீர விளையாட்டு
தமிழர்கள் மட்டுமே விளையாடும் வீர விளையாட்டு!
உலகில் வேறுஎங்கும் இதுபோல இல்லை
உலகமே வியப்படையும் ஒப்பற்ற ஜல்லிக்கட்டு!
பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் விளையாட்டு
பல்வேறு தடைகளையும் தகர்த்திட்ட விளையாட்டு!
அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் விளையாட்டு
அகிலம் முழுவதும் விரும்பிப் பார்க்கும் விளையாட்டு!
ஈடுஇணையற்ற தமிழர்களின் ஜல்லிக்கட்டு
என்றும் தொடரும் தொய்வின்றித் தொடரும்!