லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில் பாடைக்காவடி திருவிழா வரும் மார்ச் மாதம் 24 -ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட வரதராஜம் பேட்டை தெருவில்,கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இது “சக்தி தலம” என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள். ஆவணி கடை ஞாயிறு அன்று ஆலயத்திற்கு அருகில் உள்ள புனித குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.

மேலும் இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பால்காவடி, பாடைக்காவடி,அலகு காவடி, தொட்டில் காவடி உள்ளிட்டவைகள் எடுத்து நேர்த்திக்கடன் செய்வது வழக்கம்.

மிகுந்த நோய்வாய்ப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்களை பாடையில் வைத்து ஊர்வலமாக எடுத்து செல்வதைப் போன்று பாடைக்காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக் கொள்வார்கள்.

மாநிலத்தில் எங்கும் நடைபெறாத வகையில் பாடைக்காவடி திருவிழா வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் நடைபெறுவது சிறப்பு அம்சம் ஆகும். இந்நிலையில் இந்த ஆண்டு பாடைக்காவடி திருவிழா நடத்துவதற்கான தேதி குறிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஆலய செயல் அலுவலர் அ. ரமேஷ் பேசுகையில் வரும் மார்ச் மாதம் 8-ம் தேதி பூச்செரிதல் விழாவும், 10-ம் தேதி முதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும்,17 -ம் தேதி இரண்டாம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், அன்று முதல் தினசரி அம்மன் வீதி உலா காட்சியும்,விழாவின் முக்கிய நிகழ்வான பாடை காவடி திருவிழா மார்ச் மாதம் 24 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும், 31 -ம் தேதி புஷ்ப பல்லாக்கு விழாவும், ஏப்ரல் மாதம் 7-ம் தேதி பங்குனி கடை ஞாயிறு விழாவும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று பேசினார்.

நிகழ்ச்சிகளை சிறப்பாக நடைபெறுவதற்கு ! அனைவரும் ஒன்று இணைந்து செயல்பட ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் தக்கார்/ ஆய்வர் மும்மூர்த்தி, ஆலய அலுவலக மேலாளர் தீ.சீனிவாசன்,திமுக நகர செயலாளர் பா.சிவனேசன்,வர்த்தகர் சங்கத் தலைவர் கே. குணசேகரன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித்தமிழ்மாறன், பேரூராட்சி மன்ற உறுப்பினரும்,ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான க. செல்வம், வரதராஜன் பேட்டை தெருவாசிகள் நல சங்க நிர்வாகிகள் மற்றும் தெருவாசிகள், பேரூராட்சி மன்ற சுகாதார மேற்பார்வையாளர் அம்பேத்குமார், நகர முக்கியஸ்தர்கள், பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *