சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் லூலூ மார்ட் கார்ப்பரேட் நிறுவனம் கொண்டுவந்தால் அதை எதிர்த்து வணிகர் சங்கம் கடுமையாக போராடும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பழனி மாவட்டத்தின் 3ம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் ,நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜே.பி. சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- தமிழக அரசு சார்பில் வாட்வரி சமாதான திட்டம் கொண்டு வந்ததன் மூலம் 2 லட்சம் வணிகர் குடும்பங்களில் ஒளியேற்றி வைத்துள்ளதாகவும், இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், மத்திய அரசு ஜிஎஸ்டி வசூலில் பெரும் குளறுபடி செய்து வருவதாகவும், இதனால் வணிகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் தெரிவித்தார்.
கார்ப்பரேட் கம்பெனிக்கு ஆதரவாக சட்டங்கள் இருப்பதாகவும் இதனை எதிர்த்து மத்திய அரசை வலியுறுத்த டெல்லி செல்ல உள்ளதாகவும், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தை லூலூ மால் நிறுவனத்திற்கு கொடுக்க உள்ளதாக வந்த தகவல் வதந்தி என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அதுபோன்ற நிகழ்வு ஏதேனும் நடந்தால் வணிகர் சங்கம் அதை எதிர்த்து கடுமையாக போராடும் என்றும் விக்கிரமராஜா தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர், கோவை, தேனி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.