எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய மருத்துவர்கள் நியமித்து 24 மணி நேரமும் இயங்க கிராம மக்கள் கோரிக்கை. பயனற்று கிடக்கும் மகப்பேறு சிகிச்சை மையம்.போதிய கட்டமைப்புகள் இருந்தும் மருத்துவர்கள் இல்லாத அவல நிலை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குன்னம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.குன்னம்,பெரம்பூர், சென்னியநல்லூர், வடரங்கம், வாடி, பனங்கட்டான்குடி, உப்பங்காடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவசர சிகிச்சைக்காக குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையே நம்பியுள்ளனர்.

முன்னர் நாளொன்றுக்கு 500 நபர்கள் வரை சிகிச்சை பெற்று வந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது 100 பேர் கூட சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அதேபோல் இம்மருத்துவமனையில் 24 மணி நேரம் இயங்கி வந்த மகப்பேறு மருத்துவ பிரிவு மருத்துவர் இல்லாமல் முற்றிலுமாக முடங்கியதால் மகப்பேறுக்கான அவசர காலங்களில் கூட சீர்காழி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை இப்பகுதி மக்களுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் மருந்தாளுனர் பணியில் இல்லாமல் வீட்டுக்கு சென்று விடுவதால் போதிய மருந்துகள் இல்லாமல் செவிலியர்கள் இருக்கும் முதலுதவி மாத்திரைகளை மட்டுமே வழங்குவதாகவும் மேல் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு வலியுறுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உரிய மருத்துவர்களை நியமித்து 24 மணி நேரம் மருத்துவர்கள் பணியில் இருக்கவும், மகப்பேறு மருத்துவ பிரிவு முழுமையாக இயங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குன்னம் சுற்று வட்டார பகுதி கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *