வலங்கைமானில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பயன்பாட்டிற்கு எப்போது வரும் கிளை நூலகம் பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக கிளை நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்திற்கு என சொந்த கட்டிடம் இல்லாத நிலையில் பல இடங்களில் வாடகைக்கு செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புரவலராகவும், 5000க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இங்கு தினமும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
முன்னதாக கைலாசநாதர் கோயில் தெரு பகுதியில் உள்ள வாடகை கட்டிடத்தில் போதிய இட வசதி இன்றி செயல்பட்டு வந்தது. அதன் காரணமாக கணினி உள்ளிட்டவைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வாசகர்கள் அமர்ந்து படிப்பதற்கு போதிய இட வசதியும் இல்லை.
மழைக் காலங்களில் நூலகத்தில் உள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட நூல்களை பராமரிப்பது பெரும் சிரமமாக இருந்து வந்தது. தற்போது சேனியர் தெரு பகுதியில் உள்ள வாடகை கட்டிடத்தில் நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வாசகர்கள் சார்பில் வலங்கைமான் பகுதியில் நூலகத்திற்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் சொந்த கட்டிடம் கட்டித் தர வேண்டும் என தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டும் வகையில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கடந்த 2020-21 நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட உப்புக்கார தெரு பகுதியில் நூலகத்திற்கு என சொந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
நூலகத்திற்கான சொந்த கட்டிடம் கட்டப்பட்டு பல மாதங்களை கடந்த நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நூலக கட்டிடம் இதுவரை வரவில்லை. எனவே வாசகர்களின் நலன் கருதி மேலும் காலதாமதம் இல்லாமல் ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நூலக கட்டிடத்தை வாசகர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர, அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.