புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருவிளையாடல் நிகழ்வு. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரிவ் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றதாகும்.

இங்கு தை அமாவாசை தினத்தன்று அபிராமி அம்மனின் பக்தரான அபிராமி பட்டர் வழிபட அந்த நேரத்தில் கோயிலுக்கு வந்த சரபோஜி மன்னர் இன்று என்ன திதி என்று பட்டரிடம் கேட்டார். அபிராமி பட்டர் அபிராமி அம்மனை நினைத்து தியானத்தில் இருந்ததால் பௌர்ணமி திதி என்று தவறுதலாக கூறினார்.

இன்று பௌர்ணமி வரவில்லை என்றால் மரணதண்டனை விதிக்கப்படும் என்று மன்னர் கூறினார். இதனையடுத்து அபிராமி பட்டர் எரியும் நெருப்பிற்கு மேலே ஊஞ்சல் அமைத்து அபிராமி அம்மனை நினைத்து அபிராமி அந்தாதியை பாடினார்.

100 கயிறுகள் கொண்ட ஊஞ்சலில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கயிறாக அறுத்துக்கொண்டு வரும்போது 79வது பாடலான “விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ்வழி கிடக்க பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக் குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே? ” என்ற பாடலை பாடினார்.

அப்பொது அம்மன் நேரில் தோன்றி தனது காதணியை விண்நோக்கி வீசி எறிந்து முழுநிலவை தோன்றச்செய்து அபிராமி பட்டருக்கு அருள் வழங்கியதாக ஆலய வரலாறு கூறுகின்றது. அதன்படி தை அமாவாசையான இன்று அபிராமி பட்டரின் உயிரை காப்பாற்றுவதற்காக அபிராமி அம்மன் நேரில் தோன்றி தை அமாவாசையை பௌர்ணமி ஆக்கிய நிகழ்வு நடத்தப்பட்டது.

இரவு மகா மண்டபத்தில் அபிராமி பட்டர் சிலை வைக்கப்பட்டு ஸ்ரீ அபிராமி அம்மன் வெள்ளி இந்திர விமானத்தில் எழுந்தருளினார். தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் ஓதுவார்கள் அபிராமி அந்தாதியின் பாடல்களை பாடினர்.

ஓவ்வொரு பாடலுக்கும் அம்பாளுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்று கயிறு அறுக்கப்பட்டது. 79 பாடலின் முடிவில் கோவிலில் மின்விளக்குககள் அணைக்கப்பட்டு நிலவு போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்ட மின் விளக்கு மட்டும் எரியவிடப்பட்டது.

தொடர்ந்து அம்பாளுக்கு மஹா தீபாராதனை நடத்தப்பட்டு 100 பாடல்கள் பாடி நிறைவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *