விதையின் விருட்சம் !

நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !
அலைபேசி 9025459174.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

யாழினி 30/8 கன்னிக்கோவில் முதல் தெரு ,அபிராமபுரம் ,சென்னை .18. விலை ரூபாய் 50.

நூலின் அட்டைப்பட வடிவமைப்பு உள்அச்சு ,பொருத்தமான ஓவியங்கள் யாவும் மிக நன்று .நூல வடிவமைத்து வெளியிட்ட கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்களுக்கு முதல் பாராட்டு .நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் அவர்கள் நூலை பெற்றோர்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பதற்கு அடுத்த பாராட்டுக்கள் .

தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி மன்னை பாசந்தி அவர்களின் அணிந்துரையும் , திரு .பாமா மனோகரன் அவர்களின் அணிந்துரையும் மிக நன்று .நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளன .

தமிழ் மொழியின் அருமை ,பெருமை உலகம் அறிந்துள்ளது .ஆனால் தமிழ்நாட்டு தமிழர்கள்தான் தமிழ் மொழியின் அருமை , பெருமை அறியாமல் இருக்கிறார்கள் .தமிழின் பேரறுமை உணர்த்தும் கவிதை அருமை .

தமிழ்மொழி !

தித்திக்கும் தேன் மொழியாம் !
எட்டுத்திக்கும் சுவைதத மொழியாம் !
அவனியெல்லாம் நிறைந்த மொழியாம் !
தமிழன்னை மடியில் தவழ்ந்த மொழியாம் !

சாகுபடி செய்யும் விவசாயிகள் நஞ்சுண்டு சாகும்படியான வேதனை நிகழ்வுகள் தொடரும் அவலம் .அண்டை மாநிலங்களில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் காரணத்தால் வயலுக்கு நீர் இன்றி கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் .வாடிய பயர்களைக் கண்டபோதெல்லாம் வாடும் வள்ளலாராக விவசாயிகள்.

உழுவதா ? தொழுவதா ?
நாங்கள் ..

தினமும் செல்லும் காசைத்தான்
விதைக்கிறோம் .பூமியில் !
ஆனால் அறுவடையின்போது
அவை செல்லாகாசாகி விடுகிறது
உழவனின் சந்தையில் !

தீவிரவாதம் பற்றிய வரிகள் சிந்திக்க வைக்கின்றன. அரசியல்வாதிகளின் ஊழலையும் சாடுகிறது .

தீரா வாதம் ! தீவிரவாதம் !

பெற்ற சுதந்திரத்தை ஏனோ ,
சிந்திக்காமல் கொடுத்து விட்டனர்
சில சதிகாரர்களின் கையில் !
அதனால்தான் ஏனோ
தீவிரவாதம் தீரா வாதமாக
வழி நெடுககெங்கும் வாழ்ந்து வருகிறது !

மனித குல வரலாற்றில் மன்னிக்க முடியாத கொலை பாதக செயல் புரிந்த இலங்கை கொடூரனை கண்டிக்காதவர்கள் மனிதநேயம் அற்றவர்கள் .ஒவ்வொரு படைப்பாளியும் ஈழத்திற்காக குரல் கொடுக்க வேண்டியது கடமை .தனித்தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்பதை உலகம் உணர்ந்து விட்டது .நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன்அவர்களும் குரல் கொடுத்து உள்ளார் .

அப்பாவித் தமிழ்மக்கள் !

தன மனைவியை கவர்ந்ததற்கே
இலகையை அழித்தான் இராமன் அன்று .

ஒரு இனம் அழிக்கப்பட்டும்
வேடிக்கைப் பார்க்கிறது உலகம் இன்று !

சித்தர்கள் போல வாழ்க்கை தத்துவம் ,நம்பிக்கை விதைக்கும் வாழ்வியல் வரிகள் நூலில் நிரம்ப உள்ளன .பாராட்டுக்கள் .

பயணம் அறியா பாதை !

தோல்வி என்பது இடர் அல்ல !
வெற்றி பாதைக்கு வழி வகுக்கும் சுடர் !

வறுமை என்பது தொடர்கதையல்ல – அது
வாழ்க்கைப் பக்கத்தில் வந்துபோகும் !

எது கவிதை என்பதற்கான மிகச் சரியான விளக்கம் இன்னும் யாராலும் எழுதப்பட வில்லை என்பதே உண்மை . நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் அவர்கள் எது கவிதை என்பதற்கு விளக்கம் சுவையாக எழுதி உள்ளார் .

கவிதை !

சிதறிக் கிடக்கும்
சொற்களை எடுத்து
வார்த்தையாய் வடித்து
வரியாகத் தொடுத்து
எதுகையோடு மோனையும் சேர்த்து
அணியோடு நகையையும்
சுவையையும் கலந்து
அறுசுவையாக படைப்பதே கவிதை !

பலர் முதலில் காதல் கவிதை எழுதி விட்டு அதோடு நின்று விடுகின்றனர் . வெறும் காதல் மட்டும் எழுதாமல் சமுதாயம் பற்றியும் எழுதியவர்கள்தான் தொடர்ந்து எழுதி வருகிறார்கள் .காதல் கவிதை இவரும் ஊறுகாய் போல கொஞ்சமாக ரசிக்கும்படி எழுதி உள்ளார் .

அழகோவியத்தால் ஒரு காவியம் !

அவள் நினைவை
அடி மனதில் புதைத்தாலும்
மீண்டும் முளைத்து விதையாய்
என் மனதில் பல விழுதாய் !

காதலித்தவர்கள் மட்டும் .உணரும் உணர்வை படம் பிடித்துக் காட்டி உள்ளார்

நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் அவர்களுக்கு இந்நூல் மூன்றாவது நூல் .முத்திரை பதிக்கும் நூலாக உள்ளது .கவிதை வரிகள் படிக்கும் வாசகர் மனதில் விதையாய் விழுந்து பின் விருட்சம் போன்ற நினைவுகளை வரவழைத்து வெற்றி பெறுகின்றன .எண்ண அலைகளை எழுப்பி வெற்றி பெறுகின்றன .நாவலும் எழுதி உள்ளார். பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *