மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வருகிற 21-ந் தேதி மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. நிகழ்ச்சியில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை , மீனாட்சி அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குஅருள் பாலித்தனர்.

கொடியேற்ற நிகழ்ச்சி முடிந்த சிறிது நேரத்தில் திடீர் மழை பெய்து மதுரை மாநகரை குளிர்வித்தது..
இன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி- சுந்தரேஸ்வரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். விழாவில் வருகிற 19-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், 20-ந் தேதி திக்கு விஜயமும் நடைபெறுகிறது.

விழாவில் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் 21-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் . அந்த திருக்கல்யாணத்தை காண்பதற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கோவில் நிர்வாகம் சார்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் 500 ரூபாய் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
அந்த எண்ணிக்கையை காட்டிலும் அதிக அளவில் முன்பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரியவருகிறது. நிர்ணயித்ததை காட்டிலும் கூடுதலாக முன்பதிவு செய்யப் படும்பட்சத்தில் குலுக்கல் அடிப்படையில் ரூ 500 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 22-ந் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது.

23-ந் தேதி தீர்த்தவாரியுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது.

தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் சித்திரை வீதிகளில் வந்து செல்லும் வண்ணம் அங்கு பிரமாண்டமான பந்தல் அமைக்கப் பட்டுள்ளது.

இது தவிர திருக்கல்யாணம் நடைபெறும் பகுதியான மேற்கு, வடக்கு ஆடி வீதியில் பந்தல் அமைக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.
மேலும் திருவிழா நாட்களில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் காலை, இரவு இரு வேளைகளிலும் 4 மாசி வீதிகளில் வலம் வருவதால் விட்ட வாசல், அம்மன் சன்னதி தெரு, நான்கு மாசி வீதிகளிலும் போடப்படும் பந்தல்களை சுவாமி வாகனங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் 30 அடி உயரத்திற்கு மேல் அமைத்து கொள்ள வேண்டும். மேலும் வேப்பிலைத் தோரணங்கள் ஆகியவற்றினையும் சுவாமி வாகனங்கள் மேல் தட்டாமல்அமைத்து கொள்ளும்படி பொதுமக்கள், வியாபாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *