நம்ம தமிழ்நாட்டில் கம்மி பட்ஜெட்டில் அழகிய அந்தமான் தீவு

சுற்றிலும் நீலம் பூசிய கடல், அண்ணாந்து பார்த்தால் வானம் மட்டுமே கூரையாக உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளின் அழகுக்கு மவுசு கொஞ்சம் கூடுதல் தான். இங்கு ஒரு முறையாவது செல்ல வேண்டும் என ஏங்குபவர்கள் பலர் உண்டு. ஆனால் நடுத்தர வர்க்கத்தினருக்கு அவ்வளவு எளிதாக இது சாத்தியமில்லை.

கடல் சூழ்ந்த ராமநாதபுரம் மாவட்டம் சுற்றுலா தலங்களுக்கு பெயர் பெற்றது. இந்த ஊரில் அழகு நிறைந்த பல கடற்கரைகள் உள்ளன. ராமேஸ்வரத்தில் பாம்பன் தொடங்கி தூத்துக்குடியில் உள்ள மன்னார் வளைகுடா கடலில் 21 தீவுகள் இருக்கின்றன. இதில் குருசடை தீவு மிக முக்கியமானது.

குந்துகால் என்ற மீனவ கிராமதிற்கு அருகே கடலுக்குள் குருசடை தீவு உள்ளது. பவளப் பாறைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் இங்கு அதிகம் தென்படுகின்றன.

ராமேஸ்வரம் மண்டபம் பகுதியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அழகிய குருசடை தீவு அமைந்துள்ளது. குருசடை தீவு ஏறத்தாழ 66 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்துள்ளது. ஒரு நாள் பிக்னிக் செல்ல ஆசை இருந்தால் இந்த இடத்திற்கு தாராளமாக குடும்பத்துடன் செல்லலாம்.

இங்கு பல அரிய வகை கடற்பாசிகள் காணப்படுகின்றன. ராமநாதபுரம் வனத்துறை மண்டபம் வனச் சரகத்தின் கீழ் குருசடை தீவுக்குச் செல்ல படகு சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குருசடை தீவின் அழகை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் வனத்துறை சார்பாக படகு சவாரி பயன்பாட்டில் உள்ளது. இதில் ஒரு நபருக்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் படகு இயக்கப்படும். கடலின் அழகை கண் கெட்டாமல் ரசித்தபடியே பயணம் செல்லலாம்.

குருசடை தீவில் இருக்கும் பவளப் பாறைகள் நம் கண்களை விரிய வைக்க தவறியதில்லை. கடல் சீற்றம் அல்லது மோசமான வானிலை ஏற்பட்டால் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்படும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *