தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 500 அரிய வகை சிவப்பு காது ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
மதுரை ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது

சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதிகாரிகள் சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி உடமைகளை பரிசோதித்தனர்.

அப்போது பட்டுக்கோட்டையை சேர்ந்த முகமது மூபின் (28) என்பவர் சுற்றுலா விசாவில் தாய்லாந்துக்கு சென்று விட்டு திரும்பி வந்தார். அவர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர்.

அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதை அடுத்து அவர் வைத்திருந்த ஒரு பெரிய கூடையை பிரித்துப் பார்த்தனர். அதில் அபூர்வ வகை சிவப்புக் காதுகளுடைய அரிய வகை ஆமைகள் மற்றும் ஆப்பிரிக்கன் நாட்டின் அரிய வகை ஆமைகள் உயிருடன் இருந்ததை கண்டுபிடித்தனர்.

மொத்தம் 493 ஆமைகள் இருந்தன. அதில் 484 சிவப்பு காதுகள் அறிய வகை ஆமைகள். 9 , ஆப்பிரிக்கன் நாட்டின் அரிய வகை ஆமைகள் ஆகும்.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பயணியை வெளியில் விடாமல் நிறுத்தி வைத்தனர். அவர் கொண்டு வந்த ஆமைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அப்போது இந்த ஆமைகளை மதுரை மாநகரில் உள்ள ஆயுதப்படை போலீஸ்காரர் ரவிக்குமார் என்பவர் சொல்லி அனுப்பியதின் பெயரில், அவருக்காக இந்த ஆமைகளை கடத்தி வருவதாக கூறினார்.

இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளின் தனிப்படையினர், மதுரை சென்று அங்குள்ள தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் ஆறாவது பட்டாலியனில் பணியாற்றக்கூடிய ரவிக்குமார் என்பவரை கைது செய்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

ஆயுதப்படை போலீஸ்காரர் ரவிக்குமார் மற்றும் முகமது மூபின் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 2022ம் ஆண்டு ஆந்திராவில் நட்சத்திர ஆமைகள் கடத்தல் தொடர்பாக ரவிக்குமாரை ஆந்திர போலீசார் கைது செய்து உள்ளதாக தெரியவந்தது . இதை போல் வெளிநாடுகளில் இருந்து அபூர்வ வகை உயிரினங்களை கடத்திக் கொண்டு வந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் தெரிய வந்தது.

மேலும் இந்த ஆமைகள் அனைத்தும் மருத்துவ குணம் உடையவைகள். எனவே மருந்துகள் தயாரிப்பதற்கு மற்றும், பெரிய பங்களாக்களில் தொட்டிகளில் அலங்கார உயிரினமாகவும் வளர்க்கின்றனர். இவைகளை வீடுகளில் வளர்ப்பது அதிர்ஷ்டம் என்று சிலர் கருதுகின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த சிவப்புக் காதுகள் அபூர்வ வகை ஆமைகள், தென் அமெரிக்கா போன்ற நாடுகளில், நீர்நிலைகளில் அதிகமாக காணப்படுகின்றன. அதை போல் ஆப்பிரிக்க நாட்டு அபூர்வ ஆமைகள் ஆப்பிரிக்க கண்டங்களில் அடர்ந்த வனப் பகுதிகளில் அதிகமாக வசிக்கின்றன என்றும் தெரியவந்தது.

ஆமைகள் கடத்தல் வழக்கில் போலீஸ்காரர் பிடிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *