நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் புலிகள் காப்பகம்கோட்டம் பாபநாசம் வனத்துறை செக்போஸ்ட்டில் மின்வாரியத்தினருக்கும் வனத்துறையினருக்கும் ஏற்பட்ட மோதல் போக்கால் பாபநாசம் கீழ்அணை, சேர்வலாறு, காரையார் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேர்வலாரில் வேலை பார்க்கும் மின்வாரியத்தினருக்கும் வனத்துறையினருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் மோதல் போக்கு ஏற்பட்டது. மோதல் போக்கை தொடர்ந்து புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம் பகுதியில் உள்ள பாபநாசம் கீழ்அணை,சேர்வலாறு, காரையார் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாபநாசம் வனத்துறை செக்போஸ்ட்டை கடந்து தங்கள் பகுதிகளுக்கு செல்லும் போது வனதௌதுறை செக்போஸ்ட்டில் தங்களது வாகன நம்பரை பதிவு செய்துவிட்டு தான் போக வேண்டும் என்று உத்தரவிட்டு அதை அமுல்படுத்தினர்.

இதனை தொடர்ந்து இப்பகுதிகளில் வாழும் மின்வாரியத்தினர் உட்பட அனைவரும் வனத்துறையினரின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து வனத்துறையினருக்கும் இப்பகுதிகளில் வாழும் மக்களுக்கும் “ஈகோ” பிரச்சனை அதிகமாக உருவாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் சேர்வலாரில் வசித்துவரும் மின்வாரியத்தை சேர்ந்த ஒருவர் அங்குள்ள ஆற்றில் குளிக்கும் போது வனத்துறையினருக்கும் அவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு பின் மின்வாரியத்தை சேர்ந்த ஒருவரை வனத்துறையினர் அடித்துள்ளனர். இது சம்பந்தமாக விக்கிரமசிங்கபுரம் போலீசில் மின்வாரியத்தினர் வனத்துறையினரை தாக்கியதாகவும், வனத்துறையினரை மின்வாரியத்தினர் தாக்கியதாகவும் மாறி மாறி புகார் கொடுத்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பிரச்சனையை முடித்து வைத்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு வாகனத்தில் வந்த சேர்வலாற்றை சேர்ந்த சிலரை பாபநாசம் வனத்துறை செக்போஸ்ட்டில் வனத்துறையினர் சோதனை செய்த போது அவர்களிடம் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த வனத்துறையினர் தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 25 ஆயிரம் அபாராதம் வித்தனர். அரசாங்கம் விற்கும் மதுவை தங்கள் வசிக்கும் பகுதிக்கு கொண்டு செல்வதை தடுத்து வனத்துறை அபராதம் விதித்தது இப்பகுதிகளில் வாழும் மக்களை பழிவாங்கும் செயலாகும் என்று இப்பகுதியினர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

வனத்துறையினர் இச்செயலால் அதிருப்தியடைந்த அப்பகுதியினர் வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக விக்கிரமசிங்கபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்து அங்குள்ள பஸ் ஸ்டாண்டில் மின்வாரியத்தினர் கூடினர். தகவல் அறிந்து சென்ற விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் சேர்வலாறு சென்று அங்குள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையை தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

ஆனாலும் பாபநாசம் கீழ்அணை, சேர்வலாறு, காரையார் பகுதிகளில் வாழும் மக்களிடம் தொடர்ந்து விரோதப்போக்கை கடைபிடித்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வனத்துறையினர் செயல்பாட்டை கண்டித்து இப்பகுதியினர் நாளை(19 ம் தேதி) தேர்தலை புறக்கணிக்கப்போவாதாக அறிவித்துள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *