உரிய அனுமதி பெறாமல் செயல்படும் ஆவின் பாலகங்களையும் அகற்ற முடிவு

கோவில்பட்டி நகரில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் 26ந்தேதி பட்டினி போராட்டம் நடத்த போவதாக கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து இருந்தனர்.

இதையடுத்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜோன் கிறிஸ்டி பாய் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மே.9ந்தேதி கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றுவது , இன்று முதல் தற்காலிக கடைகளுக்கு உரிமைக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்துவது, அனுமதியின்றி செயல்படும் சாலையோர கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வது,கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்க முடியாத அளவிற்கு மக்கள் நடை பாதை வரை வைத்துள்ள கடை ஆக்கிரமிப்புகளை ஒரு வார காலத்திற்குள் அகற்றுவது, கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உரிய அனுமதி பெறாமல் செயல்படும் ஆவின் பாலகங்களை
அகற்ற நடவடிக்கை எடுப்பது, கோவில்பட்டி நகரில் இயக்கப்படும் மினிபஸ்களை உரிய நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்வது என கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து நாளை மறுநாள் நடைபெற இருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

கூட்டத்தில் கோவில்பட்டி தாசில்தார் சரவணப் பெருமாள், வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன், கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் சுகாதேவி, நகராட்சி, நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினை சேர்ந்த சங்கரலிங்கம், முருகன், ராஜேஷ் கண்ணா, சுதாகரன், முத்துவேல்ராஜா, அருமைராஜ், ராஜ மார்த்தாண்டன், ராஜசிம்மன், மாரிமுத்து, மனோஜ், சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *