அணைக்கரையில் கொள்ளிடத்தின் குறுக்கே கீழணையும் முக்கொம்புவில் காவிரியின் குறுக்கே மேலணையும், கல்லணையில் மணல் போக்கிகள் மற்றும் வெண்ணாறு போன்ற நீர் ஒழுங்குகள் அமைத்து, பாசன கட்டுமானங்களை கட்டியெழுப்பி, பாசன நீரை முறைப்படுத்தி,
காவிரி டெல்டாவில் உள்ள பாசன பகுதிகளுக்கு நீர் வழங்குவதற்கு தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை
பொறியாளர் சர்.ஆர்தர் காட்டன் பிறந்தாள் விழா அணைக்கரை கீழணை பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர்,
சாமு.தர்மராஜன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் மாசிலாமணி, பாரதி கலந்து கொண்டு பேசினர். அப்போது அணைக்கரை கீழணையில் சர்.ஆர்தர் காட்டன் அவர்களுக்கு சிலையும் அவரது பெயரில் நினைவு பூங்கா அமைக்க வேண்டும்.
இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை எனப் போற்றப்படும் பொறியாளர் சர்.ஆர்தர் காட்டன் கடந்த 15.05.1803 அன்று இங்கிலாந்தில் பிறந்தார். இந்தியாவில் நீர்ப் பாசன வசதிகளை செய்து தரவும், கால்வாய்கள் அமைக்கவும், அணை கட்டுவதற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார். தஞ்சை மாவட்டத்தை உள்ளடக்கிய காவிரி பாசனப் பகுதிக்கு 1829- ஆண்டில் பொறுப்பாளராக நியமிக்கப் பட்ட ஆர்தர் காட்டன், மணல் மேடு களால் நீரோட்டம் தடைபட்டிருந்த கல்லணையில் மணல் போக்கிகளை அமைத்தார்.
கரிகால் சோழன் கட்டிய கல்லணையின் அடித்தளத்தைக் கண்டு வியந்து, “ஆழம் காண முடியாத ஆற்று மணற்படுகையில் அடித்தளம் அமைக்கும் தொழில்நுட்பத்தை பண்டைய தமிழர்கள் வாயிலாக அறிந்து கொண்டேன்” என்றார். கல்லணைக்கு ‘கிராண்ட் அணை கட்’ என்ற பெயரைச் சூட்டியவரும் இவரே.
காவிரி ஆறு முக்கொம்பில் காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. கொள்ளிடம் ஆற்றுப் பகுதி தாழ்வாக இருப்பதால், அங்கு நீர் அதிகமாக பாய்ந்து காவிரியில் உரிய நீர் வரத்து இல்லாமல் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகளின் துயர் துடைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பொறுப்பை ஆர்தர் காட்டனிடம் வழங்கியது ஆங்கிலேய அரசு.கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு கடந்த 1835-36 ஆண்டுகளில் கொள்ளிடத்தின் குறுக்கே மேலணையைக் கட்டினார்.
இதனால் கொள்ளிடம் ஆற்றில் காவிரி நீர் பயனின்றி செல்வது தடுக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் அணைக்கரை கீழணை, வெண்ணாறு, வெட்டாறு உள்ளிட்ட நீர்ப் பாசனங்களையும் கட்டியேழுப்பி பாசன நீரை முறைப்படுத்தினார்.ஆந்திராவில் கோதாவரி நதியின் தவ்லேஸ்வரத்தில் ஆர்தர் காட்டன் கட்டிய அணையால் தரிசாகக் கிடந்த 10 லட்சம் ஏக்கர் நிலப் பகுதியில் இன்று முப்போகம் விளைகிறது. அதற்கு நன்றிக் கடனாக அங்கு கிராமந்தோறும் ஆர்தர் காட்டன் சிலையை நிறுவியுள்ளனர். அவரது வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் ராஜமுந்திரியில் அருங்காட்சியகம் அமைத்துள்ளனர்.
தஞ்சை மாவட்ட வேளாண்மை பணிகளுக்கு பொறியாளர் சர்.ஆர்தர் காட்டன் ஆற்றியுள்ள பணிகளை போற்றும் வகையில் இவரின் பிறந்த தினத்தை (மே மாதம் 15-ஆம் நாள்) அரசு விழாவாக கொண்டாடிட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சை மாவட்டம், கல்லனையில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட வேண்டும்.
பொறியாளர் சர்.ஆர்தர் காட்டன் பெரும்பணிகளை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனவும், அணைக்கரை கீழணையில் சர்.ஆர்தர் காட்டன் அவர்களுக்கு சிலையும் அவரது பெயரில் நினைவு பூங்கா அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.