நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஜே.கே.கே நடராஜா கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்விக்கு வழிகாட்டும் 12 -ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியர்களுக்கான கல்லூரி கனவு -2024 நிகழ்ச்சி நடைபெற்றது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் உயர்கல்வியோடு தங்களின் திறன்களை மேம்படுத்திட திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி வருகிறது. உயர்கல்வி பயின்ற பிறகு அரசு வேலைக்கு காத்திருக்காமல் அரசு வழங்கும் திட்டங்களை பயன்படுத்தி சுய தொழில் தொடங்கி தொழில் முனைவோர்களாக முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்புகளை படித்த இளைஞர்களுக்கு உருவாக்கிட இயலும்.இத்திட்டத்தின் நோக்கம் 12-ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் உள்ள பாடப்பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டய படிப்புகள் மற்றும் கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுனர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன.
இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும் வெற்றி பெறவும் வழிவகை செய்யும்.
இன்று நடைபெற்ற கல்லூரி கனவு நிகழ்ச்சியில் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகளையும், போட்டித்தேர்வுகள் குறித்தும் மாணவ செல்வங்களுக்கு ஆலோசகர்கள் எடுத்துரைத்தார்கள்.
மேலும் இம்முகாமில் அரசு தொழில்பயிற்சி நிலையம், அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி, தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, பல்வேறு தனியார் கல்லூரிகள், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்வி கடன் முகாம், திறன் மேம்பாட்டு பயிற்சி, அரசு துறையின் சார்பில் உயர்கல்வி திட்டங்கள் குறித்த அரங்குகள், சான்றிதழ்கள் பெறுவதற்காக அரசு இ – சேவை மையம் என மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுருந்தன.
முன்னதாக, அரசு கல்வி நிறுவனங்கள், அரசுத்துறைகள், தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்ட உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு அரங்குகளை மாவட்ட ஆட்சித்திலைவர் ச.உமா பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களுக்கு வழிகாட்டி புத்தகத்தை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷிலா, ஆகியோர் உட்பட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.