காஞ்சிபுரம்
கலைஞர் நூற்றாண்டு விழா -காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கான சிறப்பு சாலை பாதுகாப்பு பயிற்சி விழிப்புணர்வு வகுப்பு*

தமிழகத்தில் வாகன போக்குவரத்து தற்போது அதிகரித்துள்ள நிலையில், சாலை பாதுகாப்பு விதிகளை மீறி வாகன ஓட்டிகள் செயல்படுவதால் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்பட்டு பல்வேறு நிலைகளில் உயிரிழப்பு ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டு,சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள் பல்வேறு வகைகளில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இத்தருணத்தில்,போக்குவரத்து துறை சார்பில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கான சிறப்பு சாலை பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அவ்வகையில் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் தலைமையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு சிறப்பு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பயிற்சி டி.எஸ்.பி.ஜெயஶ்ரீ, போக்குவரத்து கழக பொது மேலாளர் தட்சிணாமூர்த்தி,போக்குவரத்து காவல் ஆய்வாளர் லோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாலை விபத்துக்களை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், தொடுத்திரை மூலம் அரசு பேருந்து ஓட்டுநர்களும் , தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கும் சாலை விதிகளை எவ்வாறு கவனம் கொள்வது, சாலை விபத்து ஏற்படும் சாத்தியக்கூறுகள் , விபத்துக்களை எவ்வாறு தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதன் மூலம் வாகன விபத்துக்கள் குறைந்து விபத்தில்லா மாநிலமாக தமிழகத்தை முன்னிறுத்துவோம் என உறுதிமொழியும் ஏற்றனர்.
இந்நிகழ்வில் சுமார் 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஓட்டுநர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.