விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்து வருவதால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக ராஜபாளையம் நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யும் நகராட்சி ஆறாவது மைல் கோடை நீர் தேக்கத்தில் ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் ஏற்றப்படுகிறது.
2 அடி தண்ணீர் ஏற்றப்பட்டு தினமும் முக்கால் அடி வரை நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது மொத்த கொள்ளளவான 18 அடி தண்ணீர் நிரம்பி பார்ப்பதற்கு ரம்யமாக காட்சியளிக்கிறது.
பொதுவாக கோடைகாலத்தில் குடிநீர் பஞ்சம் அதிகம் இருக்கும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது அந்த நிலை மாறி, கோடை காலத்தில் குடிநீர் தேக்கம் நிரம்பி வழிவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வந்து ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக வந்து கொண்டிருப்பதால் நேரடியாகவே சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஏற்றப்பட்டு, அங்கு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு ஏற்றி, முறையாக குடிநீர் ராஜபாளையம் நகருக்கு வாரம் ஒரு முறை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டில் கோடையில் குடிநீர் பஞ்சம் வராது என அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.