திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வை முன்னிட்டு மதிப்பெண் சவால் போட்டி நடைபெற்றது. மாணவர்கள் ஒவ்வொருக்கும் சமூக அறிவியல் பாடத்தில் தனித்தனியாக காலாண்டுத் தேர்வில் பெற வேண்டிய மதிப்பெண்கள் இலக்காக தரப்பட்டன.
காலாண்டுத் தேர்வு முடிந்த நிலையில் குறிப்பிட்ட மதிப்பெண் இலக்குகளை எட்டிய மாணவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா பள்ளியில் நடைபெற்றது, விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெற்றிவேலன் தலைமை தாங்கினார்,
சமூக அறிவியல் ஆசிரியர் சூரியகுமார், தென்குவளவேலி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் பாலதண்டாயுதபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பூண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் பாண்டியன் தனது சொந்த செலவில் கணித உபகரணப்பெட்டி (ஜாமென்ட்ரி பாக்ஸ்) வழங்கி பாராட்டினார்.
பரிசு பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் ரேணுகா, விஜயகுமாரி, இளையராஜா, ராமமூர்த்தி ஆகியோர் பாராட்டினர். போட்டி ஏற்பாடுகளை சமூக அறிவியல் ஆசிரியர் சூரியகுமார் சிறப்பாக செய்திருந்தார்.