பழனி அருகே விவசாயநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுவதில் வனத்துறையினர் அலட்சியம் காட்டுவதாக கூறி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனிய
பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆயக்குடி, கோம்பைபட்டி, வரதமாநதி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றில் மா, தென்னை, கொய்யா, மக்காச்சோளம், சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விவசாய நிலத்திற்குள் காட்டுயானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் நஷ்டமடைவது மட்டுமின்றி இதுவரை 14விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விவசாய நிலங்களில் புகும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று காலை முற்றுகையிட முயன்றனர்.
தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன்முருகேசன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோட்டாட்சியர் அலுழலகத்தில் முற்றுகையிட முயன்றனர்.
அப்போது தகவல் அறிந்து வந்த போலீசார் விவசாயிகளை தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து முற்றுகையிட வேண்டாம் என்றும் ஆர்ப்பாட்டம் செய்து கொள்ளுமாறும் தெரிவித்தனர். இதையடுத்து கோட்டாசியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் 2லட்சம் ஏக்கர் பரப்பளவு உள்ள திண்டுக்கல் மாவட்ட வனப் பகுதியில் வசிக்கும் 25 யானைகளை வனத்திற்குள் வைத்து பாதுகாக்க முடியாத வனத்துறை, யானைகளால் பாதிக்கப்படும் விவசாயிகளை கண்டுகொள்ளாத நிலை உள்ளது என்றும், எனவே யானைகளை விரட்டுவது குறித்து வனத்துறை தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் தீவிர போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.
இதையடுத்து வருகிற செவ்வாய் கிழமை 11ம்தேதி வனத்துறைக்கும் விவசாயிகளுக்கும் இடையே கோட்டாட்சியர் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது
விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர். இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.