கோவையில் இயற்கை எழில் சூழ்ந்த மற்றும் பல கோவில்களை தன்னகத்தே கொண்ட பகுதிகளாக தொண்டாமுத்தூர் ஆலந்துறை பூண்டி போன்ற பகுதிகள் இருந்து வருகின்றன.
குறிப்பாக வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம், நம் நாடு மட்டுமன்றி பல வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டு இயங்கி வருகிறது .
ஆன்மீகம், யோகா, தியானம் மட்டுமன்றி, அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு கல்வி, இருப்பிடம், சுகாதாரம் என பல்வேறு நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறது . கிராம புத்துணர்வு இயக்கம் என்ற பெயரில் அனைத்து கிராமங்களுக்கும் மருத்துவ வசதியையும் கொண்டு சேர்க்கிறது.
25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ஈஷா அமைப்பின் மீது மதமாற்ற சக்திகளின் தூண்டுதலோடு திராவிடர் கழகம் மற்றும் கம்யூனிஸ்ட் அமைப்புகள் போலியாக களங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றன.
யானை வழித்தடங்களை மறைக்கிறார்கள். நிலங்களை கையகப்படுத்துகிறார்கள் என்ற போலியான குற்றம் சுமத்தி, தேவையில்லாத போராட்டங்களை நடத்தி வந்தனர். இவர்களது அத்தனை போலியான வாதங்களையும் நீதிமன்றத்தின் மூலம் ஈஷா முறியடித்தது அனைவரும் அறிந்ததே.!
தற்போது ஈஷா யோகா மையம் பழங்குடியினர் மற்றும் கிராம மக்கள் பயன்பாட்டிற்காக மின் எரியூட்டு மையம் ஒன்றை அமைத்துள்ளது.
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத திராவிடர் கழகத்தினர் தொடர்ந்து மின்மயானத்தை எதிர்த்து வந்தனர்.
கோவை மாவட்ட நிர்வாகமும் ஈஷா சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் அமைத்துள்ளது. அதற்கு தடை ஏதும் இல்லை என்று கூறிய பிறகும் கூட திராவிடர் கழகம் தனிப்பட்ட நபரை தூண்டிவிட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
ஈஷா அறக்கட்டளை தகன மேடையால் யாருக்கும் பாதிப்பு இல்லை என ஈஷா தன் தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் எடுத்து வைத்த நிலையில்,இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் தகன மேடையை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. அதேபோல சட்ட விதிகளுக்கு உட்பட்டே தகனமேடை கட்டப்பட்டுள்ளதா? என அரசு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் இந்த வழக்கை ஜுன் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நிலையில், எப்படியும் ஈஷா அறக்கட்டளைக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துவிடும் என நினைத்த திராவிடர் கழகம் மற்றும் நக்சல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 14.06.2024 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு வெளியூர் ரவுடிகளை திரட்டி கொண்டு தகன மேடையை ஆய்வு செய்யப் போகிறோம் என்ற பெயரில் ஈசா யோகா மையத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறை எவ்வளவோ தடுத்து நிறுத்தியும் அவர்களையும் மீறி உள்ளே சென்று இருவரை படுகாயப்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட இருவரும் அரசு மருத்துவமனையில் இரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்கியவர்கள் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் கோவை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் ஈஷா யோகா மையத்தை தங்களது சுயலாபத்திற்காக எதிர்த்து சமூக அமைதிக்கு ஆபத்து விளைவிப்போரை அடையாளம் காண வேண்டும்.
இதற்கு பின்னணியில் தந்தை திராவிடர் பெரியார் கழகம்,
திராவிட இயக்கத் தமிழர் பேரவை,தமிழ் புலிகள் கட்சி,
விடுதலை சிறுத்தைகள்,தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதை கழகம்,சிபிஐ எம்எல் லிபரேஷன்,புரட்சிகர இளைஞர் முன்னணி போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் கிராமத்து இளைஞர்களிடம் சென்று தீவிரவாதத்தை பரப்புகிறார்கள். ஈஷா யோகா மையத்திற்கு எதிராக மூளைச் சலவை செய்கிறார்கள்.
எனவே நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நேற்று வன்முறையில் ஈடுபட்ட இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தவறுகின்ற பட்சத்தில் இந்து முன்னணி பேரியக்கம் பொதுமக்களையும் பக்தர்களையும் திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தும் என தெரிவித்துக் கொள்கிறோம்.