மகாமாரியம்மன் ஆலயத்தில் ரூபாய் ஒரு கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகாமாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலைச் சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள்.
அதேபோன்று ஆவணி கடை ஞாயிற்றுக்கிழமை ஆலயத்திற்கு அருகில் உள்ள புனித குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும். மேலும் இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பால் காவடி, பாடைக்காவடி, அலகு காவடி, தொட்டில் காவடி, பறவை காவடி உள்ளிட்ட காவடிகளை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
முன்னதாக மிகுந்த நோய்வாய்ப்பட்டு மருத்துவரால் கைவிடப் பட்ட நிலையில் பாடைக் காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவதாக வேண்டிக் கொள்வர். நோயாய் பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்களை பாடையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்வதை போன்று தாரை தப்பட்டடைகள் முழங்க, ரத்த உறவு சம்பந்தப்பட்ட உறவினர் ஒருவர் முன்னாள் செல்ல அருகில் உள்ள நீர் நிலைகளில் இருந்து பாடைக்காவடி எடுத்து ஆலயத்தை மூன்று முறை வலம் வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர்.
மாநிலத்தில் எங்கும் நடைபெறாத வகையில் பாடைக்காவடி திருவிழா வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும். இக்கால கட்டங்களில் பக்தர்கள் தங்குவதற்கு தற்காலிகமாக பந்தல் அமைப்பது வழக்கம். இந்தப் பந்தல் திருவிழா முடிந்து விட்டது பின் அகற்றப்படும். இருப்பினும் திருவிழாவில் கலந்து கொள்ளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் திருவிழா முடிந்து பிறகு அம்மனை தரிசிக்க வரும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்குவதற்கு போதிய இடம் இன்றி சிரமம் அடைந்து வந்தனர்.
நோய்வாய்ப்பட்ட பக்தர்கள் உள்ளிட்டோர் இரவு நேரங்களில் ஆலயத்தில் தங்குவதாக அம்மனை வேண்டிக் கொள்பவர், இவ்வாறு இரவு நேரங்களில் தங்குவதற்கு உரிய இடமில்லாத நிலையில், அப்பகுதியில் மூடப்பட்ட வணிக நிறுவனங்களில் வளாகத்தில் படுத்து உறங்குவர்.
மேலும் மழைக் காலங்களில் பக்தர்கள் திறந்த வெளியில் தங்குவதற்கு மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். பக்தர்களின் நலன் கருதி பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்ட வேண்டும் என பக்தர்களால் கடந்த சில ஆண்டுகளாக தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் பக்தர்களின் நலன் கருதி வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெரு மகாமாரியம்மன் ஆலயத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு பழதடைந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்த திருமண மண்டபத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் ரூபாய் ஒரு கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான ஆலய நிதி மூலம், தரைத்தளம் மற்றும் மேல் தளத்துடன் கூடிய முடி காணிக்கை மண்டபம் மற்றும் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக துவங்கப்பட்டது. தொடர்ந்து முடி காணிக்கை மண்டபம் மற்றும் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.