திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்குமார்
நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியம், நீர்முளை ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த ஏழு பனை மரங்கள் அகற்றம்.
அரசு பொது இடங்கள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள மரங்களை அகற்ற கோரும் போது மாவட்ட பசுமைக் குழுவில் அனுமதி பெறவேண்டும் என்ற விதி உள்ளது.
கடந்த மார்ச் மாதம் 13ந் தேதி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைப்பெற்ற மாவட்ட பசுமைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த தமிழகத்தின் மாநில மரமான பனை மரங்களை வேருடன் பெயர்த்து மாற்று இடத்தில் பாதிப்புகள் இன்றி நட்டு வளர்க்க வேண்டும்.
இல்லையெனில் ஒரு பனை கன்றுக்கு ஈடாக நூறு பனை கன்றுகள் (1:100) வீதம் ஏழு பனை கன்றுகளுக்கும் ஏழு நூறு பனை கன்றுகளை நட்டு மேற்கண்டவாறு நடப்பட்ட பனை கன்றுகளை நிழற்படம் எடுத்து அறிக்கையாக சமர்பிக்கவேண்டும் என்று நாகப்பட்டினம் மாவட்ட வனஉயிரினக் காப்பாளர் அவர்களால் அறிவுறுத்தப்பட்ட நிலையில்
நீர்முளை ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக பிடுங்கி மாற்று இடத்தில் நடப்பட்ட பனை கன்றுகள் உயிரிழந்து காய்ந்த சருகாக காட்சியளிக்கிற தகவல் அறிந்த பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜா மற்றும் ஒருங்கிணைப்பாளர் அருண்உமாநாத் நேரில் சென்று பார்வையிட்டனர்.
தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான பனை மரத்தினை நாகப்பட்டினம் மாவட்ட பசுமைக்குழு தீர்மானத்தின் படி நீர்முளை ஊராட்சியில் 700 பனை கன்றுகளை நடுவதற்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் உத்திரவிட வேண்டுமென பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்துகிறது.