விருதுநகர் மாவட்டத்திலேயே தொழில், விவசாயம், மக்கள் தொகை, வருமானம் போன்றவை அதிகமாக உள்ள நகர் ராஜபாளையம் நகராகும். இந்த ராஜபாளையம் நகருக்கு ராஜபாளையம் நகரை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் கேரளா, தென்காசி, குற்றாலம், மதுரை செல்லும் பயணிகள் வந்து செல்லும் நகரமாகும். இந்த பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
தற்போது மாற்று வழி எதுவும் இல்லாத நிலையில் தேசிய நெடுஞ்சாலை குறுகலாக மாறி ஆக்கிரமிப்பாளர்கள் கையில் பிடிபட்டு தற்போது மிகவும் குறுகிய சாலை ஆகிவிட்டது. இந்தச் சாலை வழியாகத்தான் பல்வேறு கனரக வாகனங்கள், இதர வாகனங்கள், பள்ளி, கல்லூரி செல்லும் பேருந்துகள், ஆலைத் தொழிலாளர்களின் பேருந்துகள் இவை எல்லாம் தவிர இரு சக்கர வாகனங்கள், நடந்து செல்பவர்கள் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புக்கு காரணமாக இருப்பதால், இந்த தேசிய நெடுஞ்சாலை புதிதாக போடும் பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் முறையிடப்பட்டது.
இது குறித்து நேரில் நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷ்யாமை சந்தித்து தொழில் வர்த்தக சங்க செயலாளர் ஆடிட்டர் நாராயணசாமி தலைமையில் குழுவினர் சந்தித்தனர்.
அது சமயம் செயற்குழு உறுப்பினர்கள், இணை சங்கங்களை சேர்ந்தவர்கள், இதில் கலந்துகொண்டு நகர்மன்ற தலைவரிடம் முறையிட்டனர்.
தென்காசி தேசிய நெடுஞ்சாலை புதிதாக அமைக்கும் பொழுது இரு புறமும் உள்ள கழிவு நீர் வாறுகாலை உயர்த்தி சமமாக இருக்குமாறு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
பதில் அளித்த நகர் மன்ற தலைவர் தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் வாறுகால் அமைந்துள்ளது.
இந்த வாறுகாலை சரி செய்யும் பணிகளை தேசிய நெடுஞ்சாலையே செய்து கொண்டால் சரி. அல்லது நகராட்சி சார்பில் செய்ய வழிவிட்டால் நாங்கள் செய்து தர தயாராக இருக்கிறோம்’ என கூறினார். எனவே மேலும் முடிக்கப்படாத பல்வேறு சாலைகள், குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் போன்றவைகளை விரைந்து செயல்படுத்தி, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறும், பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்தி கொண்டு வருமாறும் நகர் மன்ற தலைவருக்கு கோரிக்கை விடுத்தனர். அனைத்தையும் விரைந்து செய்து முடிக்க நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் உறுதி கூறினார்.