கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் வரை சாலையை அகலப்படுத்தி புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் வரை மாநில நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு கொரடாச்சேரி, நீடாமங்கலம், சாலியமங்கலம், அம்மாபேட்டை மற்றும் நார்த்தங்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள நார்த்தங்குடி என்ற பகுதியில் இருந்து புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் நகர பகுதிக்கு செல்லாமல் கொரடாச்சேரியில் இருந்து கோவில்வெண்ணி வரை செல்லும் புறவழிச் சாலையாக இச்சாலை உள்ளது.இந்த புறவழிச் சாலையில் வரும் வாகனங்கள் அதி வேகத்தில் கடந்து செல்கின்றன.
இந்த பகுதிக்கு அருகில் தான் நார்த்தங்குடி என்னும் ஊர் உள்ளது.புறவழிச் சாலையும் நீடாமங்கலம் முதல் கும்பகோணம் செல்லும் சாலையும் இணையும் இடமாக நார்த்தங்குடி உள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை சிபிஎம் கட்சி உறுப்பினரும், அரசு ஊழியருமான மோகன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதி விபத்தில் பலியானார்.
இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் திருச்சி நோக்கி புறவழிச்சாலையில் சென்று திரும்பிய போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரண்டு வாலிபர்கள் பலியானார்.
மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.இந்த விபத்தை ஒட்டி வலங்கைமான் சிபிஎம் ஒன்றிய செயலாளர் இராதா கூறுகையில்:-
அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நடைபெறுகிறது. எனவே உடனடியாக இந்தப் பகுதியில் அரை வட்ட சாலை அல்லது வேகத்தடை அமைக்க வேண்டும்.மேலும் அந்தப் பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் விபத்து நடப்பதற்கு காரணமாக உள்ளது.
எனவே உயர் மின்விளக்கு கோபுரம் அமைக்க வேண்டும். விபத்து நடைபெற்ற இடத்தை கள ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
உரிய
நடவடிக்கை எடுக்க விட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என சிபிஎம் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.