நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்
7708616040
கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்; பாரபட்சமின்றி 100 நாள் வேலைத்திட்ட ஜாப் கார்டு வைத்திருக்கும் அனைத்து பயனாளிகளுக்கும் வேலை வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு.
கிராமப்புற ஏழை எளிய விவசாயிகள் மற்றும் விவசாயிகள் கூலித்தொழிலாளிகள் பயன்பெறும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வழங்கப்பட்டு வந்தது.
மேலும் இந்தாண்டுக்கான 100 நாள் வேலை இதுவரை துவங்காத நிலையில், இதனை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் 100 நாள் வேலையை ஊராட்சியில் 50 பயனாளிகளுக்கு மட்டும் வழங்குவதாக அறிவிப்பு வெளியானதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளிகள், அதிர்ச்சிக்குள்ளாயினர்.
இந்த அறிவிப்பை திரும்பப்பெற்று ஜாப் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் 100 நாள் வேலையை பாரபட்சம் இன்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாவட்டம் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் மாவட்ட செயலாளர் மாரிமுத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார்.முன்னதாக கீழையூர் கடைத்தெரு பகுதியில் இருந்து பேரணியாக வந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர், 100 நாள் வேலையை அனைவருக்கும் உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கோஷங்கள் எழுப்பிய படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து போராட்டக்காரர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரி கிருஷ்ணன், பேச்சுவார்த்தை நடத்தி மக்களின் கோரிக்கையை ஏற்று ஜாப் கார்டு வைத்திருக்கும் அனைத்து பயனாளிகளுக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இப்போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் சித்தார்த்தன், பன்னீர்செல்வம், சுஜாதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.