ராஜபாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு! ஆயிரக்கணக்கானோர் திரண்டு வயதை மறந்து ஆடிப் பாடிக் கொண்டாட்டம்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஏ கே டி தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று சிறப்புமிக்கது ராஜபாளையத்தில் பெண்களுக்கு என தனியாக துவக்கப்பட்ட முதல் பள்ளி இதுதான். பள்ளி துவக்கப்பட்ட நாளிலிருந்து முதன்முறையாக முன்னாள் மாணவிகள் சங்கம் சார்பில் விழா நடத்தப்பட்டது.
பள்ளித் தாளாளர் கிருஷ்ண ராஜூ முன் நின்று ஏற்பாடுகளை சிறப்பாக செய்து பலர் பாராட்டையும் பெற்றார்.
1947 முதல் 2017 அறையிலான எழுபது ஆண்டுகள் இப்பள்ளியில் படித்த மாணவிகள் வரவழைக்கப்பட்டனர்.
வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் வசித்துவரும் அந்த மாணவிகளுக்கும் தகவல்கள் அனுப்பப்பட்டு ஒன்று கூடினார்கள்.
ஒவ்வொரு வகுப்பு வாரியாக, தனித்தனியாக வண்ணமயமான உடைகளுடன் பவனி வந்து கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கொண்டது மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது. கூட்டம் கூட்டமாக வந்து பாட்டு பாடி ஆட்டம் ஆடி வயதையும் மறந்து 40 வயது முதல் 70 வயது வரையிலான மகளிர் இதில் பங்கேற்றுக் கொண்டது சிறப்பாக அமைந்திருந்தது.
லேசான சாரல் மழையையும் பொருட்படுத்தாது குழந்தைகளுடன் வருகை தந்து விழாவை சிறப்பித்தனர். விழா முடிவில் இங்கு பயின்ற மாணவிகளுக்கு மலரும் நினைவாக வருடம்தோறும் இத்தகைய விழா நடத்தப்படும் எனவும் மேலும் பள்ளிக்கு தேவையான கட்டமைப்புகள் மாணவிகளுக்கு உயர்தர கல்வி மற்றும் நன்நெறிகள் வழங்கிட அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தாளாளர் கிருஷ்ண ராஜூ அறிவித்தது அனைவரது கைதட்டலையும் பெற்றது. முடிவில் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள்.