செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி அமைதி பேரணி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரத்தில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி தாராசுரம் ரவுண்டானா அருகே அமைதி பேரணி தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று தாராசுரம் பைபாஸ் கலைஞர் பொன்விழா நுழைவு வாயிலில் அமைந்துள்ள கலைஞரின் முழு உருவ சிலைக்கு மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் தலைமையில், அரசு கொறடா கோ.வி.செழியன், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
தொடர்ந்து மாநகர திமுக சார்பில் மாநகர செயலாளர் சு.ப.தமிழழகன் தலைமையில் கழக பணிமனையில் இருந்து ஊர்வலமாக அமைதி பேரணி புறப்பட்டு மகாமககுளக்கரையில் உள்ள அண்ணாசிலை அருகே அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அமைதி பேரணியில் ஒன்றிய செயலாளர்கள் கணேசன், முத்துசெல்வம், சுதாகர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகர ஒன்றிய நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கலைஞரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.