வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி மகான் ஸ்ரீலஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் தவ பீடத்தில் 75 ஆம் ஆண்டு ஆடிப்பூர குருபூஜை பவளவிழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரியில் உயர்தவ ஞானச் செல்வர் பைரவ சித்தர் பாடகச்சேரி மகான் ஸ்ரீ ல ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அருள் புரிந்த தவபீடத்தில் 75 -ஆம் ஆண்டு ஆடிப்பூர குருபூஜை பவள விழா நடைபெற்றது.
விழாவை ஒட்டி திருமடத்தில் சன்மார்க்க கொடி ஏற்றி, சுத்த சன்மார்க்க அருட் ஜோதி தஞ்சாவூர் ரங்கநாதன் ஐயா பேரூரை ஆற்றினார்.
புதுக்கோட்டை பெரியநாயகி அம்மாள் அகவல் பாராயணம் செய்தார். காலை ஒன்பது மணிக்கு உடையார் கோவில் பன்னீர்செல்வம் சொற்பொழிவு ஆற்றினார், ஹரித்து வாரமங்கலம் ஏ.கே. பி. பாலமுருகன், ஆத்தூர் என். சோமசுந்தரம் வயலின் டூயட் இன்னிசை, குடந்தை ஏ. சரவணன் மிருதங்கம், திருவிடைமருதூர் டி. ஆர். விக்னேஷ் கடம் , மலைக்கோட்டை ஆர். எம். தீன தயாளு மோர்சிங், முலையூர் என். ரவிச்சந்திரன் தபோலா நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து அருட்பா இசை பேரரசு மலையூர் எஸ். சதாசிவம் குழுவினரின் அருட்பா இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
மகேஸ்வர பூஜை உடன் அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் எம் எல் ஏ., வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் குமாரமங்கலம் கே. சங்கர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் பரிமாறி தாங்களும் அன்னதானம் உண்டனர். மாலை ஐந்து மணிக்கு ஏனநல்லூர் வள்ளலார் பாலு அருட்பா விளக்கம் நடைபெற்றது. மாலை ஆறு மணிக்கு பஞ்ச வாத்தியங்களுடன் மகான் பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் படம் வீதிஉலாஊர்வலம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் அதிக அளவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை மகான் பாடகச்சேரி ஸ்ரீலஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் கிராம அன்னதான மற்றும் கல்வி அறக்கட்டளை& கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.