தெற்கு ரயில்வேயில் உள்ள கோட்டங் களுக்கிடையேயான ரயில்வே பாதுகாப்பு படையினருக்கான கபடி போட்டி மதுரையில் துவங்கியது.
மதுரை ரயில்வே காலனி செம்மண் திடலில் முதல் நாள் கபடி போட்டிகளை மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் நாகேஸ்வரராவ் துவக்கி வைத்தார்.
போட்டிகளில் சென்னை, சேலம், திருவனந்தபுரம், திருச்சி, மதுரை கோட்டங்களைச் சேர்ந்த ரயில்வே பாதுகாப்பு படை அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் திருச்சி மற்றும் சேலம் அணிகள் மோதின. திருச்சி அணி 37 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. சேலம் அணி 13 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தது.
அடுத்து நடைபெற்ற போட்டியில் மதுரை மற்றும் திருவனந்தபுரம் அணிகள் மோதின. இதில் மதுரை அணி 26 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்றது. மதுரை அணியை எதிர்த்து திருவனந்தபுரம் அணி 9 புள்ளிகள் மட்டுமே பெற முடிந்தது. மதுரையில் நடைபெறும் இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் அகில இந்திய ரயில்வே பாதுகாப்பு படை கபடி அணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நாளை வெள்ளிக்கிழமை மாலை இறுதி போட்டி நடைபெற இருக்கிறது. துவக்க விழாவில் கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் ஏ.கே. கார்த்திகேயன், துணை ஆணையர் சிவதாஸ், கோட்ட ஊழியர் நல அதிகாரி சங்கரன், உதவி ரயில் பாதுகாப்பு அதிகாரி பொன்னுச்சாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.