ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (56). இவர் ராஜபாளையம் காமராஜர் நகர் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் மீன் கடை நடத்தி வருகிறார்.
இங்கு மலையடிப்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் மகன் கருப்பசாமி (15), துரைச்சாமிபுரம் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்த முருகன் உட்பட 8 பேர் வேலை பார்த்து வந்துள்ளனர்.
கருப்பசாமியும், முருகனும் கந்தசாமிக்கு தெரியாமல் கடையிலிருந்து மீன்களை எடுத்துச்சென்றுள்ளனர். இது தெரியவர இருவரையும் வேலைக்கு வேண்டாமெனக் கூறியுள்ளார்
இந்நிலையில் கல்லாப்பெட்டியில் ரூ.1,60,000 வைத்துவிட்டு இராமேஸ்வரம் மீன் மார்க்கெட்டுக்கு கந்தசாமி சென்றுவிட்டார். மறுதினம் காலை அவரது மனைவி அங்காளஈஸ்வரி கடையை திறந்துள்ளார்.
கடையின் பின்பக்க கதவு திறந்து கிடந்துள்ளது. இதையடுத்து கல்லாப்பெட்டியை பார்த்தபோது கல்லாப்பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இது குறித்து கந்தசாமி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் கருப்பசாமி, முருகன் இருவரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ரூ.1,11,000 பறிமுதல் செய்து சிறுவன் கருப்பசாமியை கைது செய்து இளஞ்சிறார் சிறையில் அடைத்தனர்.
மேலும் இது தொடர்பாக தலைமறைவாக உள்ள முருகனை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.