ராஜபாளையத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பணம் மோசடி! முன்னாள் ஒன்றிய சேர்மன் மீது வழக்கு!
ராஜபாளையம் செல்லம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்லச்சாமி என்பவரது மகன் சேகர் (56). இவர் பழைய பேருந்து நிலையம் அருகே பட்டாசு கடை நடத்தி வருகிறார்.
இவரது மகள் பிரியதர்சினி டிப்ளோமோ முடித்து குரூப் 4 தேர்வு எழுதியுள்ளார். அந்நாளில் ராஜபாளையம் ஒன்றிய சேர்மனாக பொன்னுத்தாய் இருந்துவந்தார்.
இந்நிலையில் பொன்னுத்தாய் சேகரிடம் எனக்கு தமிழ்நாடு அரசு தேர்வாணைத்தில் தெரிந்த நபர்கள் இருக்கிறார்கள் பணம் கொடுத்தால் பிரியதர்சினிக்கு வேலை பெற்றுவிடலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய சேகர் மூன்று கட்டங்களாக ரூ.6.95,000 பொன்னுத்தாயிடம் கொடுத்துள்ளார்.
பல ஆண்டுகளாகியும் அரசு வேலை பெற்றுத்தரவில்லை, இதனால் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார் பணமும் திரும்பிவந்தபாடியில்லை.
இதையடுத்து முன்னாள் ஒன்றிய சேர்மன் பொன்னுத்தாய் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி பணம் பெற்று அரசு வேலை பெற்றுத்தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் நம்பிக்கை மோசடி செய்ததாக ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் சேகர் புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொன்னுத்தாயின் தந்தை அழகாபுரியான் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், தற்போது அவரது தாய் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் என்பது குறிப்பிடதக்கது.