திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட பேபி டாக்கீஸ் சாலையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக கலியபெருமாள் என்பவருக்கு சொந்தமான மரம் அறுக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இரவு பணி முடிந்து மரம் அறுக்கும் ஆலையை பூட்டிவிட்டு அனைவரும் உறங்க சென்ற நிலையில், நள்ளிரவு 12 மணி அளவில் அந்த ஆலையில் மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் அந்தப் பகுதி முழுவதுமே புகைமூட்டம் நிலவியது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீ விபத்து நிகழ்ந்த பகுதிக்கு அருகில் டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது.
எனவே மின்சார துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக திருவாரூர் நகர் பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருந்த போதும் மரம் அறுக்கும் ஆலையில் உள்ள 10 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் பழுதாகின. இந்த திடீர் தீ விபத்துக்கு மின் கசிவு தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என திருவாரூர் நகர காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.