செங்குன்றம் செய்தியாளர்
சென்னையில் இருந்து-நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சுற்றுலா சொகுசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தீ எரிய ஆரம்பித்த உடன் அலறி அடித்து வெளியேறிய அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள் ஓட்டம் பிடித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நீடித்தது.
சென்னை புழல் அடுத்த காவாங்கரை பகுதியில் எஸ் .எம் .எஸ் என்ற தனியார் சுற்றுலா பேருந்து சேவை நிறுவனம் உள்ளது.
தமிழகத்தில் பல ஊர்களுக்கும் ஆந்திர மாநிலத்திற்கும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை 7.30 மணியளவில் ஓட்டுநர் மகேஷ் மற்றும் நான்கு பயணிகளுடன் பஸ்ஸில் புறப்பட்டு சென்னையில் உள்ள பயணிகளை அழைத்துச் செல்வதற்காக சென்று கொண்டிருந்தபோது காவாங்கரை நெடுஞ்சாலையில் திடீரென பேருந்தின் முன் பகுதியில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்ட ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு மூன்று சுற்றுலா பயணிகளுடன் கீழே இறங்கிய சில வினாடிகளில் பேருந்து தீ பற்றி மளமளவென்று எரிய ஆரம்பித்தது .
இதுகுறித்து தகவல் அறிந்து செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாக சொகுசு பேருந்தானது முற்றிலுமாக தீயில் எரிந்து எலும்புக்கூடானது .
இதுகுறித்து புழல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடு ரோட்டில் சென்று கொண்டிருந்த பேருந்து எரியத் தொடங்கி சில மணித்துளிகளில் எலும்பு கூடான காட்சி அளித்த சம்பவத்தால் அப்ப பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.