தேசிய ஆசிரியர் தினம் மற்றும் வ.உ.சி பிறந்தநாளை முன்னிட்டு பழனியில் கண்விழி தானம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஆசிரியர் தினம் மற்றும் வ.உ.சிதம்ரபரனாரின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பில் கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பழனி நகர் காவல்நிலையத்தில் இருந்து காவல்துறை டிஎஸ்பி தனஞ்ஜெயன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
இந்த கண்விழி தான பேரணியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்.
பழனி நகரின் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்ற மாணவர்கள் கண்விழி தானம் குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து அடிவாரம் தனியார் திருமண மண்டபத்தில் ஆயிரம் பேர் கண்விழி தானம் செய்யும் முகாம் நடைபெற்றன. மேலும் கண் விழி தானம் செய்தவர்களுக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கும் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தினர்
இந்நிகழ்வில் தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் சந்திரகுமார், நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளையை சேர்ந்த ரமேஷ் மாரிமுத்து, கோல்டன் கல்வி நிறுவனர் மாசிலாமணி உட்பட முன்னூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.