கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அருகே பெரியமலை அமைந்துள்ளது. 3435 அடி உயரம் கொண்ட இம்மலையில் உச்சியில் பெருமாள் கோவில் அமையப்பெற்றுள்ளது. அதியமான் அவ்வைக்கு இம்மலையிலிருந்து பெறப்பட்ட நெல்லிக்கனியை கொடுத்தார் என்பது வரலாறு. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இக்கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவு வந்து செல்வது வழக்கம்.
 
அவ்வகையில் புரட்டாசி மாத முதலாவது சனிக்கிழமையான பல ஆயிரம் பக்தர்கள் பெரியமலை பெருமாள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் பெரியமலை அடிவாரத்தில் அமையப்பெற்றுள்ள பெருமாள் கோவிலில் மொட்டை அடித்து தரிசனம் செய்துவிட்டு, பின்னர் வீடுகளுக்கு சென்று படைத்து உண்பது வழக்கம். சிலர் சுமார் 1700 அடி உயரத்தில் உள்ள நடுமலையில் அமையப்பெற்றுள்ள பெருமாள் கோவில் வரை சென்று வருகின்றனர்.

ஒரு சிலர் 3435 அடி உயரத்தல் உள்ள பெருமாள் கோவிலுக்கும் சென்று வருகின்றனர். மலை மீது செல்ல எவ்வித போக்குவரத்து வசதியும் இல்லாத நிலையில் கரடுமுரடான பாதையில் நடந்தே செல்ல வேண்டுமென்பதால் அதிகாலை முதல் பக்தர்கள் உச்சிமலை வரை சென்று மதியத்திற்குள் திரும்பிவிடுவர். கோவிலுக்கு பக்தர்கள் இந்த ஆண்டு அதிக அளவு குவியத்துவங்கியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் நாகரசம்பட்டி காவல் துறையினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *