தூத்துக்குடி ரைபிள் கிளப் சார்பில் பயிற்சி அகாடமி 10 மீட்டர் வரை துப்பாக்கி சுடும் பயிற்சி செய்யும் நவீன வசதிகளுடன் உள் விளையாட்டு அரங்கு சங்கரப்பேரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பட் ஜான் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். பின்னர் இருவரும் அங்கு அமைக்கப்பட்டுள்ள துப்பாக்கி சுடும் தளத்தினை பார்வையிட்டு பயிற்சி செய்தனர்.
நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பேசுகையில்; தூத்துக்குடி ரைபிள் கிளபிற்கு புதிய கட்டிடத்தை உருவாக்கிய கிளப் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுவரை வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் நம்முடைய கிளப் உறுப்பினர்கள் பயிற்சி செய்து வந்த நிலையில் தூத்துக்குடி நகருக்குள் இந்த புதிய கிளப் அமைக்கப்பட்டுள்ளது சிறப்புகுரியது. இதில் மாணவர்களுக்கும் நாம் பயிற்சி வழங்க வேண்டும் மாணவர்களுக்கு இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வரும் வண்ணமாக இந்த ரைபிள் கிளப்பில் இருந்து திறமையான வீரர்களை உருவாக்கி சாதனை படைக்க செய்ய வேண்டும் இந்த கிளப்பில் நானும் மெம்பராக இருப்பதில் மகிழ்ச்சி. தூத்துக்குடி ரைபிள் கிளப் நம் நகருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும் அதற்கு நிர்வாகிகள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மேயர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி ரைபிள் கிளப் தலைவர் ஜெகதீஷ்ராஜா, செயலாளர் மேத்யூ, பொருளாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ், நிர்வாகிகள் பேட்டர்சென், டேவிட், பர்னபாஸ், வழக்கறிஞர் டேவிட் பிரபாகரன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.